எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இன்று நாம், "கர்த்தர் ...அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார்" (2 இராஜாக்கள் 13:23) என்ற வசனத்தைத் தியானிப்போம். அன்பானவர்களே, எவ்வளவு மனதுருக்கமுள்ள தேவனை நாம் சேவிக்கிறோம்! அவர் கிருபையும் இரக்கமும் நிறைந்தவரும் தம் பிள்ளைகள்மேல் அன்பான கரிசனை காட்டுகிறவருமாயிருக்கிறார். கர்த்தர், எப்போது தம் மனதுருக்கத்தை நம்மேல் ஊற்றுகிறார்? வேதம், "உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்... அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்" (ஏசாயா 30:18) என்று பதிலளிக்கிறது.
அன்பானவர்களே, உங்கள் தேவை சிறிதானாலும் பெரிதானாலும் கர்த்தருடைய பாதத்தில் காத்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவர் சமுகத்தில் நேரம் செலவிடுங்கள்; தினமும் அவரது வார்த்தையை வாசியுங்கள்; உங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுங்கள். பொறுமையோடு அவருக்குக் காத்திருக்கும்போது, அவரது மனதுருக்கம் உங்கள்மேல் தங்கும். தமது இரக்கத்தால் அவர் உங்கள் பாவங்களை மன்னிப்பார்; உங்கள் தப்பிதங்களை மூடிப்போடுவார்; பாக்கியமான பாதையில் உங்களை நடத்துவார். நீங்கள் பொறுமையாக அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது, அவரது கிருபையை அனுபவிப்பீர்கள்; ஒருபோதும் ஏமாந்துபோகமாட்டீர்கள்.
"பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்," (ஏசாயா 31:5) என்று இன்னொரு ஆச்சரியமான வாக்குத்தத்தத்தை கர்த்தர் நமக்குக் கொடுக்கிறார். ஒரு பறவை தன் குஞ்சுகளை காப்பதுபோல கர்த்தர் உங்களைத் தற்காப்பார்; விடுவிப்பார்; நெருங்கியிருக்கும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்வார். ஆகவே, தேவ சமுகத்தில் காத்திருப்பதையே உங்கள் அனுதின வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவரது வார்த்தை உங்கள் இருதயத்தைப் பெலப்படுத்தட்டும்; அவரது ஆவியானவர் உங்களை வழிநடத்தட்டும். நீங்கள் அவரைத் தேடும்போது, அவரது பாதுகாப்பும் கிருபையும் உங்களைச் சூழ்ந்துகொள்ளும்.
வேதம், "திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான்," (ஓசியா 14:3) என்று கூறுகிறது. அன்பானவர்களே, ஒருவேளை நீங்கள் தகப்பனை, தாயை அல்லது உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவரை இழந்திருக்கலாம். நீங்கள் தனிமையாகவும் கைவிடப்பட்டதாகவும் உணரலாம். மனந்தளர்ந்துபோகாதிருங்கள். எல்லா மனுஷீக அன்பையும், உலக உறவையும் காட்டிலும் இயேசுவின் மனதுருக்கம் மிகப்பெரியதாகும். அவர் ஒருபோதும் உங்களை விட்டு விலகவோ, உங்களைக் கைவிடவோ மாட்டார். புண்பட்ட எல்லா இருதயத்துக்கும் அவரது இரக்கம் போதுமானதாகும்.
இப்போதும் அவருக்கு முன் நம்மையே தாழ்த்தி, அவரது மனதுருக்கம் நம் வாழ்வின்மேல் தங்கவேண்டுமென்று கேட்போம். நாம் அவருக்காக, அவரது கிருபைக்காக, இரக்கத்துக்காக, பாதுகாப்புக்காக காத்திருக்கும்போது அவரது கிருபை அனுதினமும் நம்மைச் சூழ்ந்துகொள்ளும். ஆண்டவர்தாமே உங்களை அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என்மீது நீர் காட்டும் நித்திய மனதுருக்கத்துக்காகவும் கிருபைக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் சமுகத்தில் பொறுமையாய் காத்திருக்கவும், உம் வேளையை நம்பவும் எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். அனுதினமும் உம் வார்த்தையை தியானிக்கும்போது என் உள்ளத்தை விசுவாசத்தினால் நிரப்பும். என் தப்பிதங்கள் எல்லாவற்றையும் மன்னித்தருளும்; உம் இரக்கத்தால் என்னை சுத்திகரித்தருளும்; தற்காத்தருளும்; விடுவியும்; எல்லா ஆபத்திலிருந்தும் தீமையிலிருந்தும் பத்திரமாகக் காத்தருளும். தனிமையில் வாடும், உடைந்துபோய் தவிக்கும், கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஒவ்வொருவரையும் தேற்றி, அவர்கள், தகப்பனாகிய உம் அன்பை அனுபவிக்கும்படி செய்யும். என்னை உம்மிடம் கிட்டிச்சேர்த்து, என் குடும்பத்தை உம் கிருபை சூழ்ந்துகொள்ளும்படி செய்யும். உம் மனதுருக்கம் என் வாழ்க்கையை வழிநடத்தட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


