எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைய வாக்குத்தத்த வசனம், "உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்" (உபாகமம் 8:18) என்று கூறுகிறது. நம் வாழ்வில் எல்லா ஆசீர்வாதமும் எல்லா வாய்ப்பும் எல்லா வெற்றியும் கர்த்தரிடமிருந்தே வருகிறது என்று இந்த வசனம் நினைவுப்படுத்துகிறது.
தேவனுடைய வல்லமையையும் ஆசீர்வாதத்தையும் நாம் எவ்வாறு அனுபவிக்க முடியும்? அவருடன் நமக்குள்ள ஐக்கியத்தால் அனுபவிக்கலாம் என்பதே பதிலாகும். நாம் கர்த்தருடன் இணைந்திருக்கும்போது, அவருடைய பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறோம். இயேசுதாமே நமக்கு பூரண உதாரணமாயிருக்கிறார். அவர், "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்," (யோவான் 10:30) என்று கூறியிருக்கிறார். இயேசு, முழுவதும் பிதாவுடன் இணைந்து வாழ்ந்ததுபோல, நாமும் தேவனை நெருங்கி நடப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்.
நாம் எப்படி அவருடன் இணைக்கப்பட முடியும்? தேவனுடைய வார்த்தையை வாசித்தல், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல், இயேசு கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொள்ளுவதன் வாயிலாக, நம் முழு இருதயத்துடனும் அவரைத் தேடுவதன் வாயிலாக அவருடன் இணைக்கப்பட முடியும். நாம் இவற்றைச் செய்யும்போது, தேவனுடனான நம் உறவு உறுதிப்படும். கர்த்தருக்குப் பயப்படும் பயம், பயபக்தி, கனம் ஆகியவையே நம்மை அவரது வழிகளில் நடக்கப் பண்ணும் என்பதே அவர் நமக்குப் போதிக்கும் முதல் பாடமாகும்.
வேதம், "கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது," (சங்கீதம் 144:15) என்று கூறுகிறது. நாம் முழு மனதுடன் அவரைப் பின்பற்றும்போது இந்த ஆசீர்வாதம் வாய்க்கும். யாக்கோபின் மனைவியரான லேயாள், ராகேல் வாயிலாக வேதம் முக்கியமான உதாரணத்தைக் காட்டுகிறது. லேயாள், தன் வாழ்வில் தேவ கரம் செயல்படுவதை கண்டு, இருதயத்திலிருந்து அவரை துதித்தாள். ராகேல், தேவ உடன்படிக்கையின் குடும்பத்தில் பங்கு வகித்தாலும் தன் தகப்பனின் விக்கிரகங்களை யாருக்கும் தெரியாமல் திருடியதன் வாயிலாக பெரிய தவற்றைச் செய்தாள். யாக்கோபு சேவித்த கர்த்தரை முழுவதுமாக நம்பி, அவரைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, தேவனுக்குப் பிரியமல்லாத காரியங்களை அவள் பற்றியிருந்தாள். அதனால் ராகேல் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சென்றடையாமல் வழியிலேயே மரித்துப்போனாள். லேயாள், தொடர்ந்து தேவனுடைய வழியில் நடந்தாள்; அவள் மரித்த பிறகும் கனம் பெற்றாள். அவள் தன் கணவன் வீட்டாருடன் அடக்கம்பண்ணப்பட்டு, நினைவுகூரப்படுகிற பாக்கியத்தைப் பெற்றாள்.
இது எவ்வளவு வல்லமையான பாடம்! தேவன் நம் பூரண தியானத்தை விரும்புகிறார். நம் இருதயங்களிலிருந்து எல்லா விக்கிரகத்தையும் அகற்றிப்போட்டு, அவரை மாத்திரமே தேடும்போது அவரது ஆசீர்வாதங்கள் நம்மை பின்தொடரும். லேயாளின் உதாரணத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டு, வாழ்வின் எல்லா தருணங்களிலும் ஆண்டவருக்கு உண்மையாயிருப்போம். தேவனை நெருங்கி நடக்கும்படி, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி, உங்கள் முழு உள்ளத்தோடும் அவரைத் தேடும்படி இன்றைக்குத் தீர்மானியுங்கள். அப்படிச்செய்யும்போது அவர் உங்களை வழிநடத்துவார்; ஆசீர்வதிப்பார்; தம் பரிபூரண திட்டத்தின்படியே உங்களை நிலைநிறுத்துவார்.
ஜெபம்:
பரம தகப்பனே, உம்மிடமிருந்து மாத்திரமே எனக்குப் பெலன் வருவதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் எதிர்கொள்ளும் எல்லா யுத்தங்களிலும் நீரே என்னை தற்காக்கிறவராயிருக்கிறீர். எனக்கு முன்சென்று என் பாதையை பாதுகாத்தருளும். உம்மை நம்புவதற்கும், அசைக்கப்படாமலிருப்பதற்கும் எனக்கு உதவும். நீர் என் ஆத்துமாவின் தாகத்தை தணித்திடும்; என் எதிர்பார்ப்பு உம்மேலேயே இருக்கட்டும். உம் வல்லமையாலும், சகலத்தையும் மேற்கொள்வதற்கான அதிகாரத்தாலும் என்னை நிறைத்தருளும். எல்லா பயத்தையும் சத்துருவின் சகல கிரியையையும் நீர் விரட்டும். உம் மகிமைக்கென்று என்னை வெற்றிக்குள் வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


