இன்றைக்கு தேவனின் அருமையான, "அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்" (எண்ணாகமம் 14:9) என்ற வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்வோம். இஸ்ரவேல் பாளயத்திற்குத் திரும்பி வந்த காலேபும் யோசுவாவும் இந்த வார்த்தைகளைக் கூறினார்கள். பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்தை, தேவன் தங்களுக்கு வாக்குப்பண்ணிய தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்காக அவர்கள் சென்றிருந்தனர். ஆனாலும், அவர்களுடன் சுற்றிப்பார்ப்பதற்காக சென்றிருந்த மற்றவர்கள், "நம்மால் கூடாது. அந்தத் தேசத்தின் மக்கள் பெலத்தவர்கள். இராட்சதர்கள் அங்கு வசிக்கிறார்கள். அந்தப் பட்டணங்கள் அரணிப்பானவை. நம்மால் அவர்களைத் தோற்கடிக்க முடியாது," என்று கூறினார்கள். ஆனால் காலேப்பும் யோசுவாவும் கூறிய வார்த்தைகளைப் பாருங்கள். "அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று". அவர்கள் சார்ந்திருந்த பாதுகாப்பு போயிற்று. இஸ்ரவேலருடன் இருந்த தேவன், அவர்கள் விரோதிகளை அவர்கள் கைகளில் ஒப்படைத்தார்.
அநேகவேளைகளில், நாம் செய்யவேண்டியவற்றை யோசித்து, "இது பெரிய காரியம். இதைச் செய்து முடிக்க எனக்கு திறமையோ, தகுதியோ, வேண்டியவையோ, மக்களோ, அபிஷேகமோ, பணமோ இல்லை. ஆகவே, என்னால் முடியாது," என்று கூறுகிறோம். நம்முடைய போதாமையை கவனிக்காதிருப்போம். மாறாக, தேவன் உங்களுக்குத் தந்திருக்கும் வாக்குத்தத்தத்தை பாருங்கள். அவர் உங்களுக்கு ஒரு தரிசனத்தை அளித்து, இந்த நிறுவனம், பள்ளி அல்லது கல்லூரிக்குக் கொண்டு வந்திருப்பார். அதே தேவன், பூரண வெற்றியை பெறும்படி உங்களை வழிநடத்துவார். அவர் எழும்பப் பண்ணி, நிலைப்படுத்துவார். தேவன், தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி, தம் சித்தத்தை உங்கள் வாழ்க்கையில் செய்து முடிப்பார். இதன்மேல் நாம் பிரியமாயிருந்து, இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்ளவேண்டும்.
ஒருமுறை ஒரு போதகர் ஒரு சம்பவத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டார். தம் ஊழியத்திற்கு சிறிதாக நிலம் வாங்குவதற்கு போராடிக்கொண்டிருப்பதாகவும், அதற்காக உபவாச ஜெபம் ஒன்றை நடத்த விரும்புவதாகவும் கூறினார். ஆனாலும் ஒருநாள் அவர் எழுந்திருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் ஸ்தோத்திர ஜெப கூட்டம் நடத்தும்படி கூறினார். ஆகவே, அவர் நினைத்தவண்ணம் அல்லாமல், ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த தொடங்கினார்கள். ஆச்சரியவிதமாக தேவன் அவர்களுக்கு ஒரு வழியைத் திறந்தார். பெரிதான ஊழியத்தை தங்களுக்குக் கொடுத்ததுடன் பெரிய தரிசனத்தையும் அளித்ததற்காக அவர்கள் ஆண்டவரை ஸ்தோத்திரித்தார்கள். அவர், அவர்களுக்கு ஜெயத்தை அளித்துவிட்டார் என்று விசுவாசித்து ஸ்தோத்திரித்தார்கள்.
அன்பானவர்களே, தேவன் உங்களுக்கு ஒரு தரிசனத்தை தரும்போது, தடைகளையோ, உங்கள் போதாமைகளையோ கவனிக்காதிருங்கள். உங்கள் தகுதிகளுக்கு மேலானவையாக சவால்கள் காணப்படும்போது பயப்படாதிருங்கள். ஆண்டவர் உங்களோடிருக்கிறார் என்பதை மறவாதிருங்கள். உங்களுக்குத் தேவையான யாவற்றையும் அவர் அருளுவார்; தம் அபிஷேகத்தால் உங்களைப் பெலப்படுத்துவார்; முன்னேறிச் செல்லும்படி உங்களை வழிநடத்துவார். பாதை, கூடாததாக காணப்பட்டாலும் அவரது வாக்குத்தத்தத்தை நம்புங்கள்; விசுவாசத்தில் அவரை ஸ்தோத்திரியுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எங்களோடு இருப்பதற்காகவும், உம் வாக்குத்தத்தங்களின்படி எங்களை வழிநடத்துவதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எங்களுக்கு முன்பாக இருக்கிற சவால்களைக் கண்டு பயப்படாதிருக்கவும், ஆவிக்குரிய கண்களால் அவற்றைப் பார்க்கவும் உதவும். எங்களுக்கு நீர் தந்திருக்கும் தரிசனத்தையும், எங்களுக்கு உரைத்திருக்கும் வாக்குத்தத்தங்களையும் நினைப்பூட்டும். வழிநடத்தும் இடத்தில் எங்களை நிலைப்படுத்தும்; எல்லா தடைகளையும் அகற்றும்; பூரண வெற்றியை எங்களுக்கு அருளும். உம் பிள்ளைகளை வேண்டிய தகுதியால், கிருபையால், அபிஷேகத்தால் நிரப்பிடும். அவர்களுக்கு முன்பாக செங்கடல் திறப்பதாக; வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர்கள் நுழைவதற்கு பாதையை சுத்தப்படுத்தும். எங்களுக்கு முன்பாகச் சென்று, பெரிய வெற்றியை அளிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


