அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்" (2 சாமுவேல் 22:31) என்று கூறுகிறது. கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும்போது, அதை அவரிடமிருந்து நேரடியாக பெற்றுக்கொள்வதுபோலே இருக்கிறது. நீங்கள் அவர் முன்னதாக நிற்பதுபோல் எண்ணிக்கொள்ளுங்கள்; அவர் தம் வாக்குத்தத்தங்களை உங்களிடம் கூறுகிறார். உங்கள் வாழ்க்கையில் எவையெல்லாம் நடைபெறும் என்று அவர் உரைக்கிறார். இது எவ்வளவு கனமும் சிலாக்கியமுமாயிருக்கிறது! தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்வது வல்லமையான அனுபவமாயிருக்கும். நாம் வேதத்தை வாசிக்கும்போதும் அப்படியே இருக்கிறது. வேதத்தில் தேவன் தினமும் நமக்குக் காண்பிக்கும் வார்த்தைகள் அருமையானவை. நாம் அவர் வார்த்தையை கனப்படுத்துவோம்.
யூதாவில் யோசபாத் என்ற ராஜா இருந்தான். அவன் அம்மோனியர், மோவாபியர் மற்றும் பிற பலத்த சேனைகளை எதிர்கொண்டான். பயந்துபோன யூதா மக்கள் தங்கள் ராஜாவால் வழிநடத்தப்பட்டபடி கர்த்தரிடம் விண்ணப்பம் செய்தார்கள். யோசபாத், தேவனை தேடும்படி அவர்களை ஒருமிக்கப்பண்ணி, மக்களை காத்துக்கொள்ளும்படி அவரிடம் வேண்டினான். அப்போது தேவன் ஒரு தீர்க்கதரிசி வாயிலாக தம் வார்த்தையை அனுப்பினார். தீர்க்கதரிசி, "திடன்கொள்ளுங்கள்; பயப்படாதீர்கள். யுத்தம் கர்த்தருடையது; உங்களுடையது அல்ல," என்று உரைத்தான். "நாளை தரித்து நின்று தேவன் அருளும் விடுதலையைக் காணுங்கள்," என்றும் கூறினான். தீர்க்கதரிசி வாயிலாக தேவனுடைய வார்த்தையைக் கேட்டதும், ராஜாவும் அவன் மக்களும் கர்த்தருக்கு முன்பாக பணிந்து அவரை தொழுதுகொண்டார்கள்.
அன்பானவர்களே, தேவன் உரைக்கும்போது, அது நடக்கிறது. ஆகவே, அவரது வசனத்தை விசுவாசித்திடுங்கள். மக்கள் விசுவாசித்து கர்த்தரை தொழுதுகொண்டார்கள். அவர்கள் யுத்தத்திற்குச் சென்றபோது, விரோதிகளின் இறந்த உடல்கள் கிடப்பதையே கண்டார்கள். அவர்கள் சண்டையிடும் முன்னரே கர்த்தர் அவர்களுக்கு பூரண வெற்றியை அருளிச்செய்தார். தேவனுடைய அற்புதம் எத்தகையது! அவரது வார்த்தை குறைவற்றது. உங்கள் வாழ்க்கையில் அது உண்மையாகும். நீங்கள் வேதாகமத்தை வாசிக்கும்போது, அந்த வார்த்தையை விசுவாசியுங்கள்; அவரது வார்த்தை நிறைவேறுவதால் கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள். அவரில் அடைக்கலம்கொள்கிற யாவருக்கும், அவரது வார்த்தையை நம்புகிற யாவருக்கும் அவர் கேடகமாயிருப்பார். எங்கள் வாயிலாக தேசத்தின் தலைவர்களுக்குச் செல்லும் தேவனுடைய வார்த்தையால் அவர்கள் தேவனிடமிருந்து வழிகாட்டுதலை பெறுவதோடு கர்த்தரின் சத்தமும் அவர்களுக்குக் கேட்கவேண்டும் என்று ஜெபிப்போம். இதன் வாயிலாக தேசத்தின் மக்கள் தேவ அடைக்கலத்தை அனுபவிப்பார்கள். தலைவர்களுக்கும் தேவனுடைய வார்த்தை தேவை.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் மகத்துவமான வார்த்தையை நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். வேதத்தின் வாயிலாக உம் குரலை அனுதினமும் கேட்கவும், உம் வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்ளவும் உதவி செய்திடும். உம் பிள்ளைகள் உம் வார்த்தையை பெற்றுக்கொள்ளும்போது, அவர்கள் ஜீவனை, வழிகாட்டுதலை, அற்புதங்களைப் பெற்றுக்கொள்ளட்டும். உம் வார்த்தையை பற்றிக்கொள்ளவும், அதை விசுவாசிக்கவும், அதை பொக்கிஷமாக காத்துக்கொள்ளவும், உம் மகத்தான விடுதலையை அனுபவிக்கவும் எங்களுக்கு உதவி செய்திடும். இந்தக் கிருபையை இன்றிலிருந்து எங்களுக்கு அருளிச் செய்து, உம் வார்த்தைக்குச் செவிகொடுக்கும் அனைவருக்கும் உம் அடைக்கலத்தை அருளிடும். உம் வார்த்தை எங்கள் நாட்டின் தலைவர்களை வழிநடத்தட்டும்; ஞானமும் நியாயமுமான முடிவுகளை எடுப்பதற்கு அவர்களுக்கு உதவும். தேசத்தின் மக்களை ஆசீர்வதித்து, சமாதானத்தை அருளி, எல்லா முரண்பாடுகளையும் இருளையும் அகற்றும். தேசத்தின்மேல் உம் ஆசீர்வாதம் தங்குவதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


