அன்பானவர்களே, தேவன் உங்களை ஆரோக்கியமாக்க விரும்புகிறார். அவர் தம் சுகமாக்கும் வல்லமையை உங்கள் உடலுக்குள் அனுப்பி வியாதியிலிருந்து உங்களை விடுவிக்க விரும்புகிறார்; அதற்காக நாம் ஜெபிக்கவேண்டும் என்றும் விரும்புகிறார். சுகத்திற்காக நீங்கள் ஏறெடுக்கும் ஜெபங்களுக்கு அவர் இப்போது பதிலளிப்பார். வேதம், "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்" (யாக்கோபு 5:15) என்று கூறுகிறது. சுகமடைவதற்கான விசுவாசத்தை தேவன் நமக்குத் தருகிறார். எதில் விசுவாசமாயிருக்கிறோம்? முதலாவது, வேதம், தேவனுடைய வார்த்தையில் விசுவாசமாயிருக்கவேண்டும் என்று கூறுகிறது. இயேசு, "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்" (யோவான் 15:7) என்று கூறுகிறார். அவருடைய வார்த்தை உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் தேவனுடைய வார்த்தையை உரிமையாக்கிக் கேட்டுக்கொள்வதெதுவோ அதைப் பெற்றுக்கொள்வீர்கள். என் தாத்தா, அதிகாலை நான்கு மணிக்கு விளக்கு ஏற்றாமல் வேதத்தை வாசித்துக்கொண்டிருப்பார். அவர் ஒரு டார்ச் விளக்கை பயன்படுத்தி ஒவ்வொரு வசனத்தின் மீதும் வெளிச்சத்தைக் காட்டி வேதத்தை வாசிப்பார். இயேசுவின் வார்த்தைகளை வாசிக்கும்போது, அவர், "ஆண்டவரே, நீரே எனக்கு, என் மகனுக்கு, என் குடும்பத்துக்கு வழியாயிருக்கிறீர்," என்று கூறுவார். அவர் தினமும் எங்கள் ஒவ்வொருவருக்காகவும் தேவனுடைய வார்த்தையை கூறி, அந்த வசனங்களை மனப்பாடம் செய்து, "ஆண்டவரே, நீர் வாக்குக்கொடுத்தபடி இதை நடப்பியும்," என்று ஜெபிப்பார். இயேசுவின் வார்த்தைகள் அத்தனையும் எங்களுக்கு உரிமையாக்கப்பட்டிருக்கும் என்று விசுவாசிக்கிறேன்; ஆகவேதான் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.
இரண்டாவதாக, அவரது நாமத்தின்மேல் வைக்கும் விசுவாசம், உங்களுக்குச் சுகத்தைக் கொண்டு வரும். வேதம், "அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது" (அப்போஸ்தலர் 3:16) என்று கூறுகிறது. இயேசு, "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்" (யோவான் 14:13,14) என்று கூறியுள்ளார். நீங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கும்போது, 'இரட்சகர்' என்று அர்த்தமுள்ள அந்தப் பெயருக்குரிய ஆண்டவர்தாமே வந்து அதைச் செய்வார். இயேசு என்ற நாமம் ஆச்சரியமானது, வல்லமையுள்ளது, மகிமையுள்ளது. இயேசு என்ற நாமத்தில் எல்லா முழங்கால்களும் முடங்கும். பிசாசுகள் ஓடும்; வியாதியுள்ளவர்கள் குணமாக்கப்படுவார்கள்; பாவங்கள் மன்னிக்கப்படும். ஏன்? நாம் தேவனிடமிருந்து எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும்படியாக இயேசு தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்தார். தேவனின் பெயர் இயேசு என்பதை நினைவுறுத்தி, நீங்கள் ஜெபிக்கும்போது, "ஆண்டவரே, எனக்குத் தேவையான ஆசீர்வாதத்திற்காக இயேசு தம்மையே பலியாக்கினார்," என்று கூறுங்கள். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. இயேசு வந்து, உங்களுக்காக எவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டீர்களோ அவற்றையெல்லாம் செய்வார்.
மூன்றாவதாக, இயேசுவின் காயங்களிலும், உயிர்த்தெழுதலின் ஆவியிலும் விசுவாசம் வைத்திடுங்கள். வேதம், "அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5) என்றும், "அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்" (மத்தேயு 8:17) என்றும் கூறுகிறது. இயேசு பலியாக்கப்பட்டார். இன்றும் அவர் ஜீவிக்கிறார். மூன்றாம் நாளில் அவர் எழுந்தாலும், அவரது சரீரத்தில் காயத்தின் தழும்புகள் இன்னும் இருக்கின்றன. இன்றைக்கும் அவரது தழும்புகள் ஜீவனோடிருக்கின்றன என்று விசுவாசியுங்கள். "ஆண்டவரே, எனக்காக இந்தக் காயங்களை நீர் ஏற்றுக்கொண்டீர்," என்று கூறுங்கள். அவர் உங்கள் சரீரத்தை, இருதயத்தை, இல்லறத்தை, வியாபாரத்தை, இழப்புகளை ஆசீர்வதிப்பார். எல்லாமும் புதியனவாகும்; நீங்கள் இரட்டிப்பான பங்கைப் பெற்றுக்கொள்வீர்கள். வேதம், "இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்" (ரோமர் 8:11) என்று கூறுகிறது. உங்கள் சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயமாயிருக்கிறது (1 கொரிந்தியர் 6:19). உலகத்திருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர் (1 யோவான் 4:4). எந்தப் பிசாசும் உங்கள் வாழ்க்கையை மேற்கொள்ள முடியாது. விசுவாசமாயிருங்கள்; ஜெபியுங்கள்; இயேசுவின் சுகமளிக்கும் வல்லமை வரும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் வார்த்தையிலும் உம் வல்லமையுள்ள நாமத்திலும் விசுவாசமுள்ளவனா(ளா)ய் உம்மிடம் வருகிறேன். நீரே என்னை சுகப்படுத்துகிறவர்; சீர்ப்படுத்துகிறவர். உம்முடைய தழும்புகளால் என் சரீரத்தை, என் இருதயத்தை, என்னுள் உடைந்திருக்கிறவை அனைத்தையும் சுகப்படுத்துவீராக. என் வாழ்வில் ஜீவனை அருளும் உம் வாக்குத்தத்தங்களை நான் உரிமையாக்கிக்கொள்கிறேன்; இன்று உம் வார்த்தையில் நிற்கிறேன். தயவாய் என்னை உம் சமாதானத்தால் நிரப்பும். என் உடலிலுள்ள எல்லா பெலவீனமும் அகன்று போகட்டும்; உம் பெலன் எனக்குள் எழும்பட்டும். என் விடுதலையை இப்போதே பெற்றுக்கொள்கிறேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


