அன்பானவர்களே, இன்றைக்கு, “கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்” (எபேசியர் 1:12) என்ற வசனத்தை தியானிப்போம். எவ்வளவு மகிமையான சத்தியம் இது! இந்த ஆசீர்வாதம் தேவனுடைய பிள்ளைகளுக்கு மாத்திரமே சொந்தமானது. நாம் இயேசுவின்மேல் விசுவாசம் வைக்கும்போது, அவர் நம்மை தமக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறார். நாம் அந்நியர்களோ, திக்கற்றவர்களோ இல்லை; மாறாக, கிறிஸ்துவின் ராஜரீக குடும்பத்தை சேர்ந்தவர்கள். வேதம், "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே" (ரோமர் 8:17) என்று கூறுகிறது. எவ்வளவு ஆச்சரியம்! இந்த உலகில் குடும்பங்கள் வாயிலாக செல்வம், நிலம், சொத்துகள் ஆகியவை கடந்து வருகின்றன. ஆனால், தேவ ராஜ்யத்தில், நம் சுதந்தரம் இவ்வுலகில் இருக்காது. அது நித்தியமானது; பரிசுத்தமானது; தேவனாலே பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. இயேசு, "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்" (யோவான் 14:3) என்று கூறியுள்ளார். அன்பானவர்களே, கிறிஸ்துதாமே நம் சுதந்தரமாயிருக்கிறார் என்று இதற்குப் பொருள். அவரைக் கொண்டிருப்பது இந்த உலகில் எல்லா பொக்கிஷங்களையும் வைத்திருப்பதற்கு மேலானது.

தேவனை நமக்குள் கொண்டிருப்பது மேலான ஆசீர்வாதமாயிருக்கிறது. இவ்வுலகின் ஐசுவரியங்கள் மங்கிப்போகும். ஆனால், கிறிஸ்துவுக்குள்ளான சந்தோஷம் என்றென்றும் நிலைத்திருக்கும். அப்போஸ்தலனாகிய பவுல், "ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்" (எபேசியர் 1:14) என்று கூறியிருக்கிறார். 13ம் வசனத்தில், "நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்" என்று கூறுகிறார். பரிசுத்த ஆவியின் மூலம் நாம் அவருடைய சொத்தாக முத்திரையிடப்பட்டு தினமும் காக்கப்படுகிறோம். தேவ ஆவியானவர் நமக்குள் இருப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! ஆகவேதான் இயேசு, "நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்" (யோவான் 17:11) என்று ஜெபித்தார். நம்முடைய இருதயங்களில் இயேசுவை கொண்டிருந்தோமானால் நாம் பாதுகாக்கப்படுவோம். நம் ஆண்டவரின் பலத்த கரங்களில் நாம் பத்திரமாகவும் சுகமாகவும் இருப்போம். நம்முடைய சுதந்தரம் பாதுகாக்கப்பட்டிருக்கும்; எந்தத் திருடனும் அதைத் திருட முடியாது; எந்த அதிகாரமும் அழிக்க முடியாது. வேதம், "கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு" (சங்கீதம் 16:5,6) என்று அழகாகக் கூறுகிறது. அன்பானவர்களே, இயேசுதாமே நேர்த்தியான சுதந்தரமாயிருக்கிறார். அவரை நாம் கொண்டிருக்கும்போது, நமக்குத் தேவையான சமாதானம், அருட்கொடை, நித்திய ஜீவன் எல்லாம் கிடைக்கும்.

இயேசுவுக்கு இருந்தவை எல்லாம் நமக்கும் இருக்கும். அவர், "என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள்" (யோவான் 17:10) என்று கூறியிருக்கிறார். நாம் அவருக்குள் எவ்வளவு ஐசுவரியமுள்ளவர்களாயிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இயேசுவை இன்னும் அதிகமாய் விரும்புவோம். நாம், "எந்தன் இயேசுவே உந்தன் நேசமே" என்று பாடுகிறோம். அதுவே நம் அனுதின ஜெபமாக இருக்கவேண்டும். பொருட்களுக்காக அல்ல; கிறிஸ்துவுக்காகவே ஜெபிக்கவேண்டும். எந்த அளவுக்கு அதிகமாக இயேசுவை கொண்டிருக்கிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக அவரது ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ முடியும். இந்த தெய்வீக சுதந்தரத்தை, கிறிஸ்துவின் பூரணத்தை, மகிமையின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும்படி கேட்போம். கிறிஸ்து இயேசுவுக்குள்ளான நித்திய சுதந்தரத்தை குறித்த விழிப்புள்ளதாக இருக்கும்படி உங்கள் குடும்பத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, கிறிஸ்துவின் மூலமாக என்னை உம் பிள்ளையாக்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இயேசுவில் மகிமையான சுதந்தரத்தை எனக்குத் தருவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். எல்லா உலக பொக்கிஷங்களைக் காட்டிலும் உம்மை நான் மேலாக மதிக்க எனக்கு உதவும். நான் உமக்குச் சொந்தமானவன்(ள்) என்று பரிசுத்த ஆவியானவர் எனக்கு நினைவுப்படுத்துவாராக. உம்முடைய பலத்த கரத்தின் கீழ் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்வீராக. என் வாழ்வில் உம் ஞானம், கிருபை, தயவு ஆகியவை நிரம்பி வழிவதாக. உம்முடைய வாக்குத்தத்தங்களின் சுதந்தரவாளியாக வாழ எனக்கு உதவி செய்யும். கிறிஸ்து என்னில் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். அனுதினமும் ஆசீர்வாதங்களும் அற்புதங்களும் என்மேல் நிரம்பி வழியவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.