அருமையானவர்களே, "அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்" (மீகா 4:2) என்பதே தேவன் நமக்கு இன்றைக்குத் தரும் வாக்குத்தத்தமாகும். ஆம், தேவனுக்கென்று வழிகள் உள்ளன. அவர் வழிகள் ஆராயப்படாதவை. ஆனாலும், அவரது பிள்ளைகளாக தங்களை முற்றிலும் ஒப்புக்கொடுக்கும் 'பாலகர்'களுக்கு அவற்றை வெளிப்படுத்துகிறார். கர்த்தரின் பாதைகள் உயர் ஸ்தலங்களில் உள்ளன. வேதம், பூமியின் உயர்ந்த இடங்களில் உங்களை ஏறியிருக்கும்படி பண்ணுவார் என்றும், சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, தேவன் ஆளுகை செய்கிறார் என்பதை அற்புதங்களினால் நிரூபிக்கும் நம் பாதங்களை மலைகளின்மேல் அழகாக நிற்கப்பண்ணுகிறார் என்றும் கூறுகின்றது (ஏசாயா 58:14; 52:7). எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசு, 'நானே வழியாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்,' (யோவான் 14:6) என்று கூறுகிறார்.
மாம்சத்தில் வந்த தேவனான இயேசு, சிலுவையில் செய்த தியாகத்தின் மூலம், நம் அனைவரையும் பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக தம் சரீரத்தை பலியாக்கியதின் வாயிலாக, நாம் தேவனுடைய பிள்ளைகளாவதற்கு வழியை உண்டுபண்ணினார். இயேசுவே உங்களுக்கு வழியாயிருக்கிறார். இன்றைக்கு அவர் உங்களுக்கு வழியை திறக்கிறார். இயேசுவை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்வதன் மூலம், உங்களுக்கு ஜீவனுக்கான வழியை அவர் திறக்கிறார். இயேசு கிறிஸ்துவாகிய வழியை எப்படி அறிந்துகொள்வது என்று அவர் உங்களுக்குப் போதிப்பார். பிரச்னைகள் வரலாம்; சோதனைகள் வரலாம்; உபத்திரவங்கள் வரலாம். ஆனால், அவர் உங்களுக்கு, அவை எல்லாவற்றையும் மேற்கொண்டு தேவனுடைய பிள்ளையாக வாழ்வதற்கான வழியை காண்பிப்பார்.
இயேசு கிறிஸ்துவாகிய வழியை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? முதலாவது, தேவனுடைய ஆவியாகிய பரிசுத்த ஆவியின் மூலம் அறிந்துகொள்ளலாம். வேதம், "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்," என்று கூறுகிறது (யோவான் 14:26). இயேசுவுடன் எப்போதும் நடப்பதற்கான வழியை அறிந்துகொள்வதற்கு இயேசுவின் ஆவியை உங்களுக்குள் பெற்றிருப்பது அவசியம். வேதம், "அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது," என்று கூறுகிறது (1 யோவான் 2:27). இரண்டாவதாக, தேவனுடைய வார்த்தையின் மூலம் அறிந்துகொள்ளலாம். வேதம், " நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்," என்றும், "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது," என்றும் கூறுகிறது (சங்கீதம் 32:8; 119:105). மூன்றாவது, தேவன், தீர்க்கதரிசனம் மூலமாக வழிநடத்துகிறார். வேதம், "உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்," என்று கூறுகிறது (அப்போஸ்தலர் 2:17). நீங்கள் சோதிக்கப்படும்போது, அவர் தப்பித்துக்கொள்வதற்கான வழியையும் காட்டுவார் (1 கொரிந்தியர் 10:13). இயேசுவே வழியாயிருக்கிறார். நீங்கள் நடக்கவேண்டிய வழியை அவர் காண்பிப்பார். ஆண்டவருக்கு உங்களை அர்ப்பணியுங்கள்; பரிசுத்த ஆவியைக் கேளுங்கள்; தேவனுடைய வார்த்தையை வாசியுங்கள்; தீர்க்கதரிசன வரத்தை தேடுங்கள். ஆண்டவருடைய வழியில் நடப்பதை நீங்கள் தெரிந்துகொள்வதால் பாதுகாக்கப்படுவீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீரே என் ஜீவனுக்கான வழியாயிருக்கிறீர். உம் வழிகளை எனக்குப் போதியும்; என் அடிகளை வழிநடத்தும். தயவாய் உம் பரிசுத்த ஆவியால் என்னை நிறைத்தருளும். உம் வசனம் என் கால்களுக்குத் தீபமாயிருப்பதாக. அனுதினமும் எல்லா சோதனையையும் மேற்கொள்வதற்கு உம் பாதையைக் காட்டுவீராக; சரியான பாதையில் என்னை நடத்துவீராக. எப்போதும் உம் பிள்ளையாக நடப்பதற்கு எனக்கு உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


