அன்பானவர்களே, "கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்" (ஏசாயா 30:18) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தம். ஆகவே, பயப்படாதிருங்கள். தேவன்  வாழ்க்கையில், குடும்பத்தில், சமுதாயத்தில் உங்களுக்கு நீதி செய்வார். தம்மை நேசிக்கிற, தம் சித்தத்தை செய்கிற தம் பரிசுத்தவான்களுக்கு ஆண்டவர் நீதி செய்கிறார். வேதம், "கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்" (சங்கீதம் 37:28) என்று கூறுகிறது. அதை, "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்" (எரேமியா 17:7,8) என்றும் விவரிக்கிறது. உலக நெருக்கடியின்போதும், பொருளாதார சிரமங்களின்போதும், கடினமான காலங்களிலும் தேவன் தம் பரிசுத்தவான்களை அசைந்திடாமல் காத்துக்கொண்டார்.
பரிசுத்த ஆவியின் மூலமாக உங்களுக்குள் இயேசுவை சுமந்துசெல்கின்ற, அவரது சத்தத்திற்குச் செவிகொடுக்கிற, அவரது சித்தத்தைச் செய்கிற பரிசுத்தவானாக நீங்கள் இருக்கிறீர்களா? அப்படியானால், தேவன் உபத்திரவ காலத்தில் உங்களைக் காத்து, பெரும் பஞ்சத்தின் மத்தியிலும் செழிப்பாக்குவார். யோனாவை பார்த்தீர்களானால், அவனுடைய கீழ்ப்படியாமையின் மத்தியிலும் தேவன் அவனுக்கு நீதி செய்தார். யோனா, தேவனுடைய அழைப்புக்கு விலகி ஓடிப்போகையில் பெரும் காற்று எழும்பியது; அவன் கடலுக்குள் போடப்பட்டான். ஆனாலும், அவனை காப்பாற்றி தாம் விரும்பிய நினிவே பட்டணத்திற்குக் கொண்டு வரும்படி தேவன் ஒரு பெரிய மீனை அனுப்பினார். யோனா மனந்திரும்பினான்; தேவனுக்குக் கீழ்ப்படிந்தான்; மனந்திரும்புதலைக் குறித்து பிரசங்கித்தான். மக்கள் தங்கள் பாவங்களை விட்டு திரும்பினர்; தேவன் இரங்கி பட்டணத்தை தப்ப விட்டார். தனிப்பட்ட முறையில் கனம் பண்ணுவதற்கு முன்பாக தேவனுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்று இது நமக்குப் போதிக்கிறது. நம் சொந்த பெயருக்காக அல்ல; தேவனுடைய சித்தம் நிறைவேற்றப்படவேண்டும் என்றே நாம் ஊழியம் செய்கிறோம்.

மக்களுக்கு முன்பாக உங்கள் நீதி செல்லும்படி வைத்தும் தேவன் நியாயஞ்செய்கிறார். வேதம், "விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்" (ஏசாயா 58:8) என்று கூறுகிறது. 1985ம் ஆண்டில் எங்கள் குடும்பம் மிகுந்த உபத்திரவத்தின் வழியாக கடந்து சென்றது. என் தகப்பனாருக்கு, பல்கலைக்கழகம் ஒன்றை கட்டும்படி தேவன் கட்டளையிட்டபோது, அவரது சிறுநீரகங்கள் பழுதுபட்டன. சிலர் பொதுவெளியில் அவரை கேலி செய்தனர்; அவதூறு செய்தனர். விரைவிலேயே என் தங்கை கொடிய விபத்தில் உயிரிழந்தாள். எங்கள் உள்ளங்கள் உடைந்துபோயின. ஆனாலும், 1986 ஜூலையில், நாங்கள் தேவன் முன்பாக விழுந்து, "ஆண்டவரே, எங்கள் சித்தமல்ல; உம் சித்தமே ஆகக்கடவது," என்று கூறினோம். உடைக்கப்பட்ட நிலையிலும் கீழ்ப்படிதலை தெரிந்துகொண்டோம். பரிசுத்த ஆவியானவர் எங்களைப் பெலப்படுத்தினார்; எங்கள் இருதயங்களைக் குணப்படுத்தினார்; எங்களை மீண்டு எழும்பப் பண்ணினார். அவரது வல்லமையினால் காருண்யா பல்கலைக்கழகம் இன்று ஸ்தாபிக்கப்பட்டு, தேவனுடைய நீதிக்கும் உண்மைக்கும் சாட்சியாக நிற்கிறது. இயேசுதாமே தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். தேவனுடைய நீதியை நிறைவேற்றுவதற்காக அவர் சிலுவைக்குச் சென்றார். நம் எல்லோருக்குமாக அவர் மரித்தார்; ஆனால், மூன்றாம் நாளில் தேவனுடைய நீதி மேற்கொண்டது. பரிசுத்த ஆவியானவர் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். இயேசு, இன்று ராஜாதி ராஜாவாக ஆளுகை செய்கிறார். அவ்வண்ணமே, தேவன் உங்கள் கீழ்ப்படிதலை கனம்பண்ணி, தம் மகிமைக்கென்று உங்களை நிலைப்படுத்துவார்.

தேவன், உபவாசித்து ஜெபித்து தொடர்ந்து தம்மை தொழுதுகொள்கிறவர்களுக்கு தம் சித்தத்தை வெளிப்படுத்தி நீதி செய்கிறார். அன்னாள், இரவும் பகலும் தேவனை தொழுதுகொண்டாள். அவளுடைய பக்தியினால், தேவன் தம் திட்டத்தை அவளுக்கு வெளிப்படுத்தினார்; அவள் மேசியாவை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தாள் (லூக்கா 2:37,38). பலியைப் பார்க்கிலும் நியாயம் செய்வதும் நீதி செய்வதுமே தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (நீதிமொழிகள் 21:3). நியாயத்தை தேடவும், ஒடுக்கப்பட்டவனை ஆதரிக்கவும், திக்கற்றப் பிள்ளையை ஆதரித்து, விதவைக்காக முறையிடும்படி வேதம் நமக்குக் கட்டளையிடுகிறது (ஏசாயா 1:17). ஒடுக்கப்பட்டவர்களின் கூப்பிடுதல் கர்த்தரின் செவிகளை எட்டுகிறது என்று வேதம் எச்சரிக்கிறது (யாக்கோபு 5ம் அதிகாரம்). மக்களை வெறுத்துவிட்டு, தேவனுடைய அன்பை உரிமை கொண்டாட முடியாது என்றும் வேதம் நினைவுப்படுத்துகிறது (1 யோவான் 4:20). ஒருவர், ஒரு தேசத்தின் பிரதம அமைச்சரானபோது, வழிகாட்டும்படி என்னிடம் விசாரித்தார். நான், "நீங்கள் பாரபட்சத்தோடு ஆளுகை செய்ய முடியாது. ஒவ்வொருவரையும் உங்கள் சொந்தப் பிள்ளையைப்போல் நேசித்தால், தேவனே உங்கள் நாற்காலியைக் காத்துக்கொள்வார். உங்கள் மூலமாக அவரே தேசத்தை நடத்துவார். நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்," என்று கூறினேன். இது நம் அனைவருக்குமே பொருந்தும். நம் குடும்பங்களில், வேலை ஸ்தலங்களில், திருச்சபைகளில், சமுதாயத்தில் பாரபட்சமின்றி நாம் அனைவர்பேரிலும் கரிசனையாயிருக்கவேண்டும். நீதியாய் வாழுங்கள்; அனைவருக்கும் நியாயம் செய்யுங்கள்; எல்லோரையும் நேசித்திடுங்கள். தேவன் உங்களுக்கு நீதி செய்வார். நீங்கள் உறுதியாக நிலைப்படுத்தப்படுவீர்கள்; கனிகொடுப்பீர்கள்; அசைக்கப்படாதிருப்பீர்கள்; ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள். தேவனுடைய நீதி உங்கள் வாழ்வில் காணப்படும்.

ஜெபம்:
தேவனாகிய தகப்பனே, நீர் நியாயமும் நீதியுமுள்ள நியாயாதிபதியாயிருக்கிறீர். என் வாழ்க்கையை, என் குடும்பத்தை, என் எதிர்காலத்தை உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். நீதியாய் வாழவும் எல்லாவற்றிலும் உம் சித்தத்தைச் செய்யவும் எனக்கு உதவும். தண்ணீரண்டை நாட்டப்பட்ட மரமாக என்னை எல்லா காலங்களிலும் காத்தருளும். உபத்திரவ காலங்களில் என்னை பெலப்படுத்தி, உம் நீதி எனக்கு முன்பாக வெளிச்சமாக செல்லும்படி பண்ணும். பாரபட்சமின்றி அனைவரையும் நேசிப்பதற்கு எனக்குப் போதித்தருளும். நான் உம்மை தொழுதுகொள்ளும்போது உம் சித்தத்தை எனக்கு வெளிப்படுத்தும். நீர் எனக்கு நியாயம் செய்வீர் என்று நம்பி இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.