அன்பானவர்களே, இன்றும் தேவனின் ஜீவன் உங்களுக்குள் பாய்கிறது. நாம் தேவனின் ஜீவனோடு நடக்கப்போகிறோம். இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அந்த ஜீவன் வருகிறது. "கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக" (2 தெசலோனிக்கேயர் 3:5) என்று வேதம் கூறுகிறது. இன்று உங்களுக்குள் வந்துள்ள தேவ அன்பினால், வாழ்க்கைப் பயணத்தில் பொறுமையோடு ஓடும்படி அவர் செய்வார். இயேசு, சிலுவையை நோக்கிய தம் பயணத்தில் எவ்வளவு பொறுமையோடிருந்தார் என்பது நமக்குத் தெரியும். மரணத்தை கடந்து செல்லவேண்டுமென்று அவர் அறிந்திருந்தாலும், மனுஷீக உருவில் இருப்பவருக்கு மரணத்தை விருப்பத்தோடு ஏற்றுக்கொள்வது எளிதல்ல. ஆம், அவர் மிகவும் பொறுமையோடு இருந்தார்; அமைதியாக மரணத்தின் பாதையை கடந்து சென்றார். அந்த நீடிய பொறுமை நமக்குள் வரப்போகிறது. இயேசு, நமக்காகவே அதைச் செய்தார்.

இப்போது, நாம் ஆண்டவருக்காக அதைச் செய்யப்போகிறோம். அவருக்காக, தாழ்மையோடு சிலுவையைச் சுமக்கப்போகிறோம். இன்றைக்கும் வியாபாரத்தில் நீங்கள் தாழ்வுகளைக் கடந்து செல்லலாம். வேலையில் ஏற்ற தாழ்வுகளைக் காணலாம். படிப்பில் சிலவேளைகளில் தோல்வியைக் காணலாம்; அது மிகவும் வேதனையாக இருக்கும். ஆனால் இந்த நீடிய பொறுமை நம்மை உயர்த்தப்போகிறது; தலையை உயர்த்தி, "நான் தொடர்ந்து இதையே செய்யப்போகிறேன்," என்று கூறும்படி செய்வார். தாழ்ச்சியான இந்தச் சூழ்நிலையிலிருக்கும் உங்களை மறுபடியும் உயர்த்தி, தொடர்ந்து முன்னேறப் பண்ணுவார்.
தாழ்மையின், தோல்வியின் பாதையானது தாழ்மையை நமக்குப் படிப்பிப்பதற்காக மாத்திரமே அனுமதிக்கப்படுகிறது. ஆகவே, அன்பானவர்களே, அது உண்மையான தோல்வி அல்ல; வெற்றிக்கான தேவனின் பாதையாகும். நாம், தேவனின் மகத்தான உயரங்களை அடையும்படி, சிறந்தவர்களாக மாறுவதற்கு தாழ்மையை கற்றுக்கொள்ளவேண்டுமென்று அவர் விரும்புகிறார். வெற்றியின் பாதையில் தொடர்ந்து ஓடும்படி, அவருக்குக் கீழ்ப்படிவதில் பொறுமையாயிருக்கும்படி, அவரை பின்பற்றும்படி, மனந்தளராதிருக்கும்படி உங்களுக்கு நீடிய பொறுமையை கொடுப்பார். கால்பந்து அணியின் மேலாளர் ஒருவர், ஒருமுறை 38 போட்டிகள் வெற்றிப் பெற்றதற்குப் பிறகு, அவரது அணி ஒருபோட்டியிலாவது தோற்கவேண்டும்; இல்லையென்றால் நம்மில் குறைவே இல்லை என்று வீரர்கள் நினைத்துவிடுவார்கள் என்று கூறினார். அப்படிப்பட்ட தோல்வி, எந்தக் குறையை அவர்கள் நிவிர்த்தி செய்யவேண்டுமென்று காண்பிப்பதோடு, இன்னும் சிறப்பாக உதவும். சாம்பியன் பட்டத்தை பெறவும் செய்யும் என்றார். அவ்வாறே, தேவன், நாம் வளர்வதற்கும், மேலே எழுவதற்கும் நீடிய பொறுமையை கற்றுக்கொடுக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பொறுமையாக இருப்பதற்கு எனக்கு உதவி செய்யும். எனக்கு ஏற்படும் தோல்விகளையெல்லாம் சகித்துக்கொள்வதற்கும் உதவும். விடாமுயற்சியுடன் தொடர்ந்து பயணிக்கச் செய்யும். ஆண்டவரே, நான் முயற்சியை விட்டுவிடமாட்டேன்; ஏமாற்றமடையமாட்டேன். மனமுடையவோ, அழுதுகொண்டிருக்கவோ மாட்டேன். ஆண்டவரே, இது என் முடிவல்ல. இது, போதனையின், கற்றுக்கொள்வதன், தாழ்மையின் தருணமே ஆகும். உம்மை நம்புவதற்கும் கீழ்ப்படிவதற்கும் விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவரே, பெலவீனமாகும் தருணங்களில், நான் மறுபடியும் எழுந்து பிரகாசிக்கும்படி உம் கிருபை என்னில் பரிபூரணமாக விளங்கப்பண்ணும். ஆண்டவரே, உம் கிருபைக்காக ஸ்தோத்திரிக்கிறேன். நான் மகா உயரங்களுக்கு எழும்புவேன் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.