எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இன்று நாம், "கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்" (2 தீமோத்தேயு 4:18) என்ற விலையேறப்பெற்ற வாக்குத்தத்தத்தைத் தியானிக்கப்போகிறோம். அன்பானவர்களே, இது தேவனிடமிருந்து வந்த வாக்குத்தத்தமாகும். தேவனுக்கு உங்களை எல்லாத் தீமையிலிருந்தும் வெளியே கொண்டு வருவதற்கான வல்லமை உண்டு. இந்த உலகம் முழுமையும் தீமையாயிருக்கிறது. பிசாசு, நம் வாழ்வை அழிக்க நினைக்கிறான். கர்த்தரோடு நெருங்கி நாம் ஜீவிப்பது எப்படி? வேதம், "கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது" (நீதிமொழிகள் 19:23) என்று கூறுகிறது. நாம் ஆண்டவருக்குப் பயந்து அவரது வழிகளில் நடக்கும்போது, அவர் நம்மை தீமை அணுகாமல் பாதுகாப்பு மிகுந்த வாழ்க்கைக்குள் நடத்துகிறார்.

அன்பானவர்களே, நீங்கள் சாத்தானின் தீமையான வழிகளில் நடக்கிறீர்களா அல்லது ஆண்டவரின் வழிகளில் நடக்கிறீர்களா? வேதம், "இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது," (லூக்கா 10:19) என்று கூறுகிறது. ஆகவே, பிதாவாகிய தேவனை நீங்கள் பற்றிக்கொள்ளவேண்டும். பிசாசின் கைகளில் இருந்து உங்களை இரட்சிப்பதற்காக சிலுவையில் தன் ஜீவனைக் கொடுத்த நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றிக்கொள்ளுங்கள்.

வேதம், "கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்," (2 தெசலோனிக்கேயர் 3:3) என்று கூறுகிறது. ஆண்டவர் உண்மையுள்ளவர், அவர் சத்துருவின் சகல தாக்குதல்களிலுமிருந்தும் உங்களைக் காத்துக்கொள்வார். "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்...அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே," என்றும் வேதம் கூறுகிறது (எரேமியா 29:11). ஆகவே, இயேசுவைப் பற்றிக்கொள்ளுங்கள். அவரை நீங்கள் பற்றிக்கொள்ளும்போது, உங்களுக்கு சமாதானமும் சந்தோஷமும் உண்டாயிருக்கும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் சிலுவையில் பலியானதற்காகவும், எல்லாத் தீமையிலிருந்தும் என்னை மீட்டுக்கொள்வதாகவும் வாக்குப்பண்ணியிருப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மையே பற்றிக்கொள்ளவும், உம்மை அண்டி ஜீவிக்கவும் எனக்கு உதவும். சத்துருவின் வழிகளில் அல்லாமல் உம் வழிகளில் நான் நடக்கும்படி செய்யும். இந்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் தொட்டு, உம்மை கிட்டிச்சேரப்பண்ணும். உம்மையே அவர்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ள உதவும். எல்லா அடிமைத்தனத்தையும் நீக்கி, எல்லா கட்டுகளிலிருந்தும் அவர்களை விடுவித்தருளும். உம் சமாதானத்தாலும் சந்தோஷத்தாலும் அவர்களை உள்ளங்களை நிரப்பிடும். எல்லா தீமையான தாக்குதல்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்து, உம் வழிகளில் நடத்தும். சமாதானத்துக்கேதுவானவையான உம் எண்ணங்கள் அவர்கள் வாழ்வில் நிறைவேறட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.