அன்பானவர்களே, இன்றும் அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவனாகிய நம் கிருபையின் ஆண்டவர் இயேசு உங்களோடு இருப்பாராக. "அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்" (2 கொரிந்தியர் 13:11) என்ற வாக்குத்தத்தத்தை உங்களுக்கு அளிக்கிறேன். அவரே, அன்புக்கும் சமாதானத்துக்கும் தேவனாயிருக்கிறார். ஒருவேளை நீங்கள், "எனக்கு அன்பே கிடைக்கவில்லை; என்னிடம் அன்பு காட்டுவதற்கு யாருமேயில்லை," என்று கூறலாம் அல்லது, "நான் எவ்வளவோ அன்பு காட்டுகிறேன்; ஆனால், யாருமே எனக்கு திரும்ப அன்பு காட்டவில்லை," என்று நினைக்கலாம். "பிறரிடம் நான் காட்டும் அன்பை யாருமே அங்கீகரிக்காதிருக்கிறார்கள்," என்று நினைக்கும் உங்களிடம் ஆண்டவர், "நீ பாவியாயிருக்கும்போதே நான் உன்னை நேசித்து என் ஜீவனையே உனக்காகக் கொடுத்தேன்," என்று கூறுகிறார். அப்படிப்பட்ட அன்பை நீங்களும் அனுபவிக்கும்படி செய்வார்.
உங்கள் குறைவுகளின் மத்தியிலும் நீங்கள், "என்னிடம் குறைகள் இருக்கிறது; யார் என்னை நேசிப்பார்கள்?" என்று எண்ணும்போது, அவரது அன்பு உங்கள் பூரணத்தைச் சார்ந்ததல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று அவரது எல்லையில்லாத, விவரிக்கக்கூடாத அன்பு உங்களிடம் வரும். தமது அன்பின் கரங்களை விரித்தவராய் உங்களை அழைத்து, தம் மார்போடு அணைத்து ஆசீர்வதிப்பார். குட்டிப் பிள்ளைகளுக்கு அவர் இப்படி செய்தார். இயேசுவுக்கு நீங்களும் குட்டிப் பிள்ளையாகவே இருக்கிறீர்கள். இதையே அவர் உங்களுக்கும் செய்வார். வேதம், "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" என்று இதை நேர்த்தியாக உறுதிப்படுத்துகிறது (ரோமர் 5:8). அவர் நமக்குச் செய்த தியாகத்தினால் அவரது அன்பு வெளிப்படுத்தப்பட்டது. இன்று அவரது கிருபை உங்களைக் கழுவி, சுத்தப்படுத்தி, எல்லா குறைகளிலுமிருந்து விடுவிப்பதாக.

இந்த தியாக அன்பு, "ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை" (யோவான் 15:13) என்ற வசனத்தில் வெளிப்படுகிறது. இயேசு, இந்த அன்பை வெளிப்படுத்தி நம்மை சிநேகிதர்கள் என்று அழைக்கிறார். அவர், "நீ எனக்கு அன்பான சிநேகிதன்," என்று கூறுகிறார். சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். ஆகவே, அவரது அன்பு உங்களைத் தாங்கும்; உபத்திரவங்களிலிருந்து உங்களுக்கு விடுதலை அருளும். நீங்கள் அந்த உபத்திரவங்களை சந்திக்கும்போது உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. வேதம், "நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்" (எபிரெயர் 4:16) என்று கூறுகிறது. உங்கள் உபத்திரவங்களை ஆண்டவரிடம் கொண்டு வந்து அவரிடம் உதவி கேளுங்கள். அவர் இரக்கம் காண்பித்து, உங்களுக்குத் தேவையான கிருபையை அருளுவார். உங்கள் சூழ்நிலைகளுக்குள் அவர் சமாதானத்தை அருளி, உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்களோடு இசைந்து வாழும்படி செய்வார்.

தைரியமாயிருங்கள். வேதம், "அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்" (யோபு 25:2) என்று நினைவுப்படுத்துகிறது. உங்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் அவரால் சமாதானத்தை அளிக்க முடியும். ஆகவே, இன்று நீங்கள் எந்தப் பாரத்தைச் சுமந்துகொண்டிருந்தாலும் அவரிடம் கொண்டு வாருங்கள். வேதம், "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்" என்று கூறுகிறது (பிலிப்பியர் 4:6,7). அந்த சமாதானம் இன்று உங்கள் இருதயத்தை நிரப்பிட இடங்கொடுங்கள். தேவ சமாதானம் உங்கள்மேல் வரும்போது, "சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்," என்று வேதம் கூறுகிறது (ரோமர் 16:20). இன்று இயேசுவின் நாமத்தினால் சத்துருவின், அவனது தூதர்களின் கிரியைகள் யாவும் உங்கள் கால்களின் கீழ் நசுக்கப்படுவதாக. நீங்கள் விடுவிக்கப்படுவீர்களாக. ஆண்டவர்தாமே தம் அன்பாலும் சமாதானத்தாலும் உங்களை நிரப்பி, நன்மைகளை அனுபவிக்கவும், நற்செய்திகளை பெறவும் உதவி செய்து, அவர்மேல் அன்புகூரப்பண்ணி, உங்கள் வாழ்க்கையை முழுவதும் அவர் கரங்களில் ஒப்புவிப்பதற்கான கிருபையை அருளுவாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் கிருபையாலும் பூரண சமாதானத்தாலும் என் உள்ளத்தை நிரப்பிடும். என் பெலவீனத்திலும் குறைகள் மத்தியிலும் உம் கிருபையை அனுபவித்திட உதவும். என்னை அரவணையும்; பெலப்படுத்தும்; எல்லா உபத்திரவங்களிலிருந்தும் விடுவித்தருளும். என் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் உம் சமாதானமே ஆளுகை செய்வதாக. சத்துருவின் சகல கிரியையையும் என் காலின் கீழே நசுக்கிப் போட்டு என்னை விடுவித்தருளும். உம் அன்பு என்னை நிரப்பி, உம்மை நேசித்து, உம் கரங்களில் என் வாழ்க்கையை முழுவதும் ஒப்படைக்கச் செய்வதாக. என் வாழ்வில் அன்பையும் அங்கீகாரத்தையும் செழிப்பையும் பரிபூரணத்தையும் சீர்ப்படுதலையும் நலனையும் அளித்தருளும். நான் இழந்த எல்லாவற்றையும் திரும்ப தந்து, என் வேலையையும் குடும்பத்தையும் ஆசீர்வதித்தருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.