அன்பானவர்களே, இன்றைக்கு நாம், "அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்" (நீதிமொழிகள் 2:8) என்ற வசனத்தை தியானிப்போம். நாம் உத்தமாய் நடக்கவேண்டும். வேதம், "உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்" (சங்கீதம் 121:3) என்று கூறுகிறது.
மேலும், கர்த்தர் நம்மைக் காக்கிறவர்; கர்த்தர் நம் வலதுபக்கத்திலே நமக்கு நிழலாயிருக்கிறார் என்றும் வேதம் கூறுகிறது (வசனம் 5). ஆம், நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும். அவன் இடறினாலும் கர்த்தர் அவன் கரத்தைப் பிடித்திருக்கிறபடியால் விழுந்துபோவதில்லை. பாதையில் நம்மை காக்கும்படி தம் தூதர்களுக்கு அவர் கட்டளையிடுவார். நம் பாதங்கள் கல்லில் இடறாதபடிக்கு தேவ தூதர்கள் நம்மை தங்கள் கரங்களில் சுமந்துசெல்வார்கள். இவ்வாறெல்லாம் தேவன் நம்மை பாதுகாக்கிறார் என்பதை அறிந்துகொள்வது எவ்வளவு அருமையாயிருக்கிறது! அவர் ஒருபோதும் தூங்குவதில்லை; உறங்குவதுமில்லை. நம்மை நாள் முழுவதும், 24 மணி நேரமும் கண்ணோக்கிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நான் பார்த்த வீடியோ ஒன்று என்னை உண்மையிலேயே பரவசப்படுத்தியது. ஃபாதர் ஜாண் பாக் என்ற 87 வயது போதகர் தம் வெள்ளை ஹூண்டாய் காரை ஓட்டிக் கொண்டிருந்தார். ஞாயிறு ஆராதனை ஒன்றுக்கு அவர் சென்றுகொண்டிருந்தார். ஆலயத்தை நோக்கி அவர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு SUV கார், அவரது காருக்கு மேலாக பறந்து சென்றது. என்ன நடந்தது என்பதைக் கூட அவர் அறிந்திடவில்லை. SUV காரை ஓட்டி வந்தவர், தனக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், கார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கூறினார். அந்த SUV கார் ஒரு கம்பத்தில் மோதி, ஃபாதர் ஜாணின் காருக்கு மேலாக குதித்துச் சென்றுள்ளது. வழிபாடு முடிந்ததும் ஒரு காவல் அதிகாரி ஃபாதர் ஜாணிடம் சென்று, கண்காணிப்பு காமிரா எடுத்த வீடியோவை காண்பித்தார். அதைக் கண்ட ஃபாதர் ஜாண் மிகவும் ஆச்சரியப்பட்டார். அவர், "நம் தேவன் எவ்வளவு நல்லவர். கர்த்தர் மெய்யாகவே என்னை பாதுகாத்தார். ஆண்டவர் என்னை தம் கரங்களில் சுமந்து செல்கிறார்," என்று கூறினார்.
ஆம், ஆண்டவர் உங்கள் பாதையை காக்கிறார்; உங்களைப் பாதுகாக்கிறார். அவ்வண்ணமே உங்களையும் ஆண்டவர் பாதுகாப்பார். எந்தப் பொல்லாப்பும் உங்களுக்கு நேரிடாது. ஆண்டவர்தாமே உங்களைப் பாதுகாப்பதுடன், பாதைகளிலெல்லாம் உங்களை பத்திரமாய் காத்துக்கொள்வாராக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை கண்ணோக்குவதற்காகவும், எப்போதும் என்னை பாதுகாப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உத்தமமாய் நடப்பதற்கும், தொடர்ந்து உமக்கு உண்மையாயிருக்கவும் எனக்கு உதவி செய்யும். நான் இடறும்போது என் கால் சறுக்கிடாமல் உம் பலத்த கரத்தால் என்னை தாங்கிக்கொள்ளும். என் நிழலாயிருந்து, உம் தெய்வீக பாதுகாப்பு என்னை சூழ்ந்துகொள்ளும்படி செய்யும். என்னைக் குறித்தும், என் குடும்பத்தைக் குறித்தும் உம் தேவ தூதர்களுக்குக் கட்டளை கொடுத்து, எல்லா தீமைகளுக்கும் எங்களை விலக்கிக் காத்துக்கொள்வீராக. எல்லா போதகரையும், நற்செய்தியாளரையும், தேவ பிள்ளையையும், எல்லா குடும்பத்தையும் பாதுகாத்தருளும். உம் விலையேறப்பெற்ற இரத்தம் எங்களை மூடிக்கொள்ளட்டும்; அனுதினமும் உம் நன்மையை காண்பதற்கும் ருசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் எங்களுக்கு உதவீராக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


