அன்பானவர்களே, இன்றைக்கு, "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்" (1 யோவான் 5:4) என்ற அருமையான வசனத்தை தியானிக்கிறோம். தேவனுக்குள் பிறப்பது என்பது முற்றிலும் புதிய அனுபவம். தேவன், நமக்குள் எதுவும் இருப்பதற்கு அனுமதிக்கமாட்டார். அவர் தம்மாலே நம் பாத்திரத்தை நிரப்புவார். அவர் நமக்குள் இருக்கும்போது, நம்மால் உலகத்தை ஜெயிக்க முடியும். மறுபடியும், அந்த வசனம், உலகத்தை ஜெயிப்பவர் யார் என்று கூறுகிறது. இயேசு, தேவ குமாரன் என்று விசுவாசிக்கிறவர்களால் மட்டுமே ஜெயிக்க முடியும். நாம் இயேசுவை விசுவாசிக்கவேண்டும். பிறகு அவர் வந்து நமக்குள் வாசம்பண்ணுவார். தேவனுடைய பிள்ளை ஒவ்வொருவரும் உலகத்தை ஜெயிக்க முடியும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிறது என்பதே அடிப்படை. இயேசுவே தேவ குமாரன் என்று விசுவாசிக்கவேண்டும். தேவ குமாரனாகிய இயேசுவால் அல்லாமல் ஒருவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க முடியாது. அவரே வாசல். அவரே வழி. அவரே சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்.

உங்கள் விசுவாசத்தின் மூலம் உங்களால் உலகை ஜெயிக்க முடியும். இந்த உலகம் அதிக பொல்லாங்கானது. உலகத்தில் உள்ள யாவற்றையும் உலகத்தின் அதிபதி அழிக்கிறான். நீங்கள் உலகை நம்பும்போது, இருளுக்குள் இருப்பீர்கள். ஆனால், இயேசுவை விசுவாசிக்கும்போது, ஒளியைப் பெற்றுக்கொள்வீர்கள். இயேசு, "நானே உலகத்தின் வெளிச்சமாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்," என்று கூறுகிறார். நீதிமான் விசுவாசத்தால் பிழைக்கிறான். ஆகவேதான் இயேசு, "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும், திடன்கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்," என்று கூறுகிறார். அவரை உங்கள் உள்ளத்தில் கொண்டிருந்தால், உங்களாலும் உலகத்தை ஜெயிக்க முடியும். தேவனுக்கு ஸ்தோத்திரம்! தேவன், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மூலமாக நமக்கு ஜெயம் தருகிறார். உலகத்திலிருக்கிறவனிலும் உங்களுக்குள்ளிருக்கிறவர் பெரியவர்.

ஜனங்கள், உலகத்தில் இருக்கிறவனை துதிக்கலாம்; ஆராதிக்கலாம். உலக பழக்கவழக்கங்களை பின்பற்றலாம். இவ்வுலகத்தின் அதிபதியின் திட்டங்களாலும் யோசனைகளாலும் அநேகர் வஞ்சிக்கப்படலாம். ஆனால், தேவனுடைய வார்த்தை உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் என்று தெளிவாகக் கூறுகிறது. இந்த மகா தேவன் உங்களுக்குள் இருந்தால் நீங்கள் உலகத்தை ஜெயிப்பீர்கள். அதுவே, தேவனால் மறுபடியும் பிறப்பதாகும். ஆண்டவர் இயேசு இரவில் நிக்கொதேமுவுடன் மறுபடியும் பிறப்பதைக் குறித்து பேசும்போது, "நீ மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டாய்," என்று கூறினார். தேவனுடைய ஆவியானவரை நமக்குள் பெற்றிருந்தால், நாம் உலகத்தை ஜெயித்து, தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிப்போம். நம் மாம்சம் பெலவீனமானது; ஆனால், நமக்குள் வாசம்பண்ணும் ஆவி பெலமுள்ளது. ஆகவே, மனுஷீக முயற்சிகளால் நாம் மேற்கொள்வதில்லை. ஆவியானவரே எல்லா யுத்தங்களையும் செய்கிறார். அவரே நமக்கு வெற்றியை தருகிறார். அவரே சோதனைகளை மேற்கொண்டு, நீதியாய் வாழ்வதற்கு நமக்கு உதவுகிறார். நம்மில் அநேகர் நீதியாய் வாழ்வதற்கு போராடுகிறோம். இன்று உங்கள் உள்ளத்தை ஆண்டவருக்குக் கொடுப்பீர்களா?

ஜெபம்:
பரம தகப்பனே, இயேசு, தேவ குமாரன் என்றும் என்னை இரட்சிக்கிறவர் என்றும் விசுவாசிக்கிறேன். இப்போதும் தயவாய் வந்து என்னை உம் பிரசன்னத்தினால் நிரப்பும். பரிசுத்த ஆவியினால் என்னை அபிஷேகித்து, இவ்வுலக காரியங்களை உம்மீதுள்ள விசுவாசத்தினால் மேற்கொள்ள உதவி செய்யும். ஆண்டவரே, என் வாழ்வின் இருளான பகுதிகளில் உம் வெளிச்சம் வீசச் செய்யும். தயவாய் என் யுத்தங்களை நடப்பித்து எனக்கு வெற்றியை அருளும். உம் இரட்சிப்பின் சந்தோஷத்தை நான் அனுபவிக்கும்படி செய்து, உம் மகிமைக்காக நீதியாய் வாழ்வதற்கு உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.