இன்றைய வாக்குத்தத்தம், "உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்" (1 யோவான் 4:4) என்று கூறுகிறது. தேவ சமுகத்தால் நாம் பெரியவர்களாவோம் என்று இந்த ஆச்சரியமான வாக்குத்தத்தம் நினைவுப்படுத்துகிறது. பரிசுத்த ஆவியானவரே நமக்குள் வாசம்பண்ணுகிறார். சாத்தான், கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுகிற பாவமான உலகில் நாம் வாழ்ந்தாலும், தேவ ஆவியானவர், அந்தகாரத்தின் எல்லா வல்லமையைக் காட்டிலும் மிகவும் பெரியவர் என்பதால் நாம் பயப்படவேண்டாம். வேதம், சாத்தானை சத்தியத்திற்கு விரோதி என்றும் பொய்க்குப் பிதா என்றும் கூறுகிறது (யோவான் 8:44). மாறாக, இயேசு, "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்," என்று கூறினார். இந்த உலகத்தின் அதிபதி என்று சாத்தான் அழைக்கப்பட்டாலும், அவன் அதிகாரம் தற்காலிகமானது; எல்லைக்குட்பட்டது (யோவான் 12:31). அவனுக்கு தேவனைப்போல் வல்லமை கிடையாது. பரிசுத்த ஆவியானவரின் ஞானமும் வல்லமையும் சத்துருவின் எந்த சதியையும் வஞ்சகத்தையும் விடவும் மிகவும் பெரியதாகும்.

பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணுவதால், அவர் இந்த உலகத்தின் காரியங்களை நிதானித்து அறியக்கூடிய ஞானத்தை நமக்குத் தருகிறார்; தேவன் நமக்காக ஆயத்தம்பண்ணியிருக்கிற பரிபூரண ஜீவனோடு வாழச் செய்கிறார். ஆகவே, ஆண்டவர் நம்மை தம் ஞானத்தின் ஆவியாகிய பரிசுத்த ஆவியால் நிரப்பவேண்டுமென்று ஆண்டவரிடம் கேட்கவேண்டும். இயேசுதாமே இந்த பூமியில் வாழ்ந்தபோது, ஞானத்திலும் வளர்த்தியிலும் தேவ கிருபையிலும்  மனுஷர் தயவிலும் விருத்தியடைந்தார். அவ்வாறே, பரிசுத்த ஆவியானவர் இந்த உலகில் நாம் கிறிஸ்துவைப்போல வாழ உதவுகிறார். தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். இது நம்முடைய சொந்த பலம் அல்ல; நமக்குள் கிரியை செய்கிற பரிசுத்த ஆவியானவரின் பலமே ஆகும். நம்மைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே நம்மால் எல்லாவற்றையும் செய்து, வாழ்வில் தேவ நோக்கத்தை நிறைவேற்ற முடியும்.

அநேக வாலிபர்கள் வெற்றி பெறுவதற்கு கடினமாக முயற்சிக்கிறார்கள். அவர்கள் தோல்வியுறும்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். அதைரியம், அவநம்பிக்கை, மனச்சோர்வு அவர்களைப் பிடித்துக்கொள்கிறது; ஒன்றுக்கும் தகுதியில்லாதவர்கள் என்று அவர்களை உணரச் செய்கிறது. ஆனால் நாம் பரிசுத்த ஆவியானவரை சார்ந்துகொள்ளும்போது, நம் வாழ்வில் செயல்பட அவரை அனுமதிக்கும்போது, நம்மோடு இருக்கும் அவரது சமுகத்தை கனம்பண்ணும்போது, தேவன்தாமே நம்மை கனப்படுத்துகிறார். தேவன் நம்மை வழிநடத்தும்போது எந்தத் தோல்வியும் இறுதியானது கிடையாது. ஆகையால், ஒருபோதும் அதைரியப்படாதீர்கள். இந்த உலகம் முழுவதும் உபத்திரவங்கள் நிறைந்தது. ஆனால், இயேசு ஏற்கனவே உலகத்தை, சாத்தானை, பாவத்தின் வல்லமையை ஜெயித்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவரால் நாம் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவராயிருக்கிறார். தேவ ஆவியானவரால் நீங்கள் உலகத்தை ஜெயிப்பீர்கள்.

இயேசு, "நான் இருக்கிறவிதமாகவே நீங்களும் உலகத்தில் இருப்பீர்கள்," என்று நிச்சயமாய் கூறியுள்ளார். அவர் தம் பிள்ளைகளுக்கு சாத்தானின்மேல் எல்லா வல்லமையையும் அதிகாரத்தையும் அளித்துள்ளார். சாத்தானின் வல்லமை எல்லைக்குட்பட்டது; அவன் காலம் தற்காலிகமானது; ஒருநாள் அவன் நரகத்திற்குள் வீசப்படுவான். அவன் மடங்கடிக்கப்பட்ட சத்துரு. ஆகவே, ஒருபோதும் சாத்தானின் வல்லமையின்மேல் கவனத்தை வைக்காதீர்கள். மாறாக, உங்கள் கண்களை இயேசுவின்மேல் வைத்திடுங்கள்; அவர் ராஜாதிராஜாவாக எந்நாளும் வாழ்வார்; சத்துருவைக் காட்டிலும் நித்திய காலம் பெரியவராயிருப்பார்.

இன்றே இயேசுவிடம் வாருங்கள். உங்கள் இருதயத்தில் அவரை ஏற்றுக்கொண்டு, அவரது பரிசுத்த ஆவியால் நிரப்பும்படி கேளுங்கள். அவர் தம் வல்லமையால், அன்பினால், ஞானத்தினால், தெளிந்த புத்தியினால் உங்களை நிரப்புவார். அவர் உங்களுக்கு வாழ்வில் வெற்றி தந்து, எல்லா அதைரியத்துக்கு மேலாகவும் உங்கள் தலையை உயர்த்தி, உங்களை முற்றும் ஜெயங்கொள்ளப்பண்ணுவார். பிசாசு மக்களை வஞ்சிப்பதற்கு, அதைரியப்படுத்துவதற்கு, நசுக்குவதற்கு வகை தேடும்போது, இயேசு நம்மை ஜெயம் பெறச் செய்து உயர்த்துவார். அவரால் உங்களை வல்லமை வாய்ந்த தலைவராகவும், தேவனுடைய உண்மையான ஊழியராகவும் எழுப்பி, அநேகரின் வாழ்வில் தமது அதிசயங்களை நடப்பிக்க முடியும். ஆண்டவரால் எல்லா மனச்சோர்வையும் அகற்ற முடியும்; எல்லா ஒடுக்குதலையும் குணப்படுத்த முடியும்; சமமற்ற வேதிச் சமநிலைகள் எல்லாவற்றையும் தொட முடியும்; அவரது உயிர்த்தெழுதலின் வல்லமை உங்கள் ஆரோக்கியத்தை பூரணமாய் திரும்பப்பண்ணட்டும். அவரது வெளிச்சம் உங்கள்மேல் பிரகாசிக்கட்டும்; உங்கள் வாழ்வில் அவர் வல்லமை விளங்கட்டும்; அவரது ஞானத்தை, செழிப்பை, பாதுகாப்பை, ஜெயத்தை நீங்கள் அனுதினமும் அனுபவிப்பீர்களாக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இந்த உலகத்தில் உள்ள எந்த அதிகாரத்தைக் காட்டிலும் நீர் பெரியவர் என்பதை எனக்கு நினைவுப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் உள்ளத்தை உம் புதிதான பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்; உம் ஞானம், அன்பு, வல்லமை, தெளிவான சிந்தை என்னில் நிரம்பி வழிவதாக. எல்லா பயத்தையும், அதைரியத்தையும், மனச்சோர்வையும், சத்துருவின் வஞ்சகத்தையும் அகற்றும். எல்லா தோல்வியையும் மேற்கொள்ள எனக்கு உதவும். உம் பெலனால், கிறிஸ்துவுக்குள் நான் முற்றும் ஜெயங்கொள்ளும்படி செய்யும். என் வாழ்வில் இடிந்த பகுதிகள் எல்லாவற்றையும் உம் உயிர்த்தெழுதலின் வல்லமை சீர்ப்படுத்துவதாக; எல்லா ஒடுக்குதலின்மேலும் வெற்றியை தந்து, உம் மகிமைக்கென்று உண்மையான சாட்சியை என்னை நிலைநிறுத்துவீராக. பிறர் நம்பிக்கையையும் அற்புதங்களையும் பெற்றுக்கொள்ளும்படி என்னை வல்லமையான ஊழியக்காரியாக்குவீராக / ஊழியக்காரனாக்குவீராக. உம் வெளிச்சம் அனுதினம் என்னில் பிரகாசிப்பதாக; நீர் எனக்குத் தந்த அதிகாரத்துடன் நடக்கச் செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.