அன்பானவர்களே, "தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" (லூக்கா 2:10) என்பதே இன்றைக்கான தேவனுடைய வாக்குத்தத்தம். வயல்வெளியில் தங்கள் மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு தேவதூதனால் இது கூறப்பட்டது. ஆம், தேவதூதர்கள் முதலாவது ராஜாக்களை சந்திக்கச் செல்லவில்லை. அவர்கள் மிகவும் எளிமையான, மிகவும் தாழ்மையான மேய்ப்பர்களிடம் சென்றார்கள். மேய்ப்பர்கள் என்ன உணர்ந்திருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள். தங்கள் மந்தையோடு அவர்கள் சமாதானமாக படுத்திருந்திருக்கலாம். திடீரென, எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாமல் ஒரு தேவதூதன் தோன்றினான். அவர்கள் மிகவும் பயந்துபோனார்கள். ஆனால் தூதன், "பயப்படாதீர்கள், மிகுந்த சந்தோஷத்தை தரும் நற்செய்தியை அறிவிக்கிறேன்," என்று கூறினான்.
ஆம், இன்றைக்கு நீங்கள் அப்படியே நினைக்கலாம். மற்றவர்களைப் போல, உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கும் உங்களை, தேவன் தம் வாக்குத்தத்தத்தை கொண்டு செல்ல தெரிந்துகொண்டிருக்கலாம். இந்த தேவதூதன் திடீரென வந்து அவர்களை ஆசீர்வதித்ததுபோல, இன்று நீங்கள் ஆசீர்வாதம் பெறும் நாளாக விளங்கப்போகிறது. அன்பானவர்களே, அனைவரும் கைவிட்டதாக நினைக்கிறீர்களா? உங்களுக்கு நெருக்கமானவர்களும், உங்கள் மேற்பார்வையாளர்களும் உங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதாக நினைக்கிறீர்களா? உங்களை ஆசீர்வதிப்பதாக ஆண்டவர் இன்று கூறுகிறார். மேய்ப்பர்கள் அடுத்ததாக என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் இயேசுவைப் பார்க்க ஓடினார்கள். இயேசுவைப் பார்த்ததும் சந்தோஷம் அவர்களை நிரப்பியது; அங்கே நின்றுவிடவில்லை. அவர்கள் சென்று மற்றவர்களிடம் இயேசுவைக் குறித்துக் கூறினார்கள் (லூக்கா 2:17). அதே ஆசீர்வாதம் இன்று உங்கள்மேல் வரப்போகிறது. இயேசு தமது சந்தோஷத்தால் உங்களை நிரப்பப் போகிறார். உங்களாலும் உங்களை நிறுத்த முடியாது. நீங்கள் சென்று, "இயேசு எனக்கு இதைச் செய்தார். இயேசுவிடம் இதே அனுபவத்தை பெற்றிடுங்கள்," என்று எல்லோரிடமும் கூறுவீர்கள்.
இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் நடக்கிற சிறுகாரியமாக இருக்கலாம்; ஆனால், உங்கள் வாழ்க்கையிலும் மற்றவர்கள் வாழ்க்கையிலும் அது மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும். ஒருநாள் என் மகள் கேட்டி, காலையிலேயே எழுந்தாள். அவள் கட்டிலை விட்டு இறங்கி அருகே அமர்ந்தாள். அப்போது எங்கள் நாய், காஃபி அவளிடம் ஓடி வந்தது, தன் தலையை அவள் மடியில் வைத்தது. அது சிறிய காரியம்தான். ஆனால், அவள் மிகவும் மகிழ்ந்தாள். அவள், "அம்மா, காஃபி என்ன செய்கிறது பாருங்கள்!" என்று என்னிடம் கூறினாள். நாய் வந்தது சுகமாய் அவள் மடியில் படுத்துக்கொண்டது. அது எழுந்ததும், அவள் என் கணவர், மாமா, அத்தை மற்றும் வீட்டிலிருக்கும் அனைவரிடமும், "பாருங்கள், காஃபி இப்படிப் படுத்துக்கொண்டது. எனக்கு ரொம்ப சந்தோஷம்," என்று கூறினாள். அவ்வண்ணமே, உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சிறிய காரியம், நீங்கள் நெடுங்காலமாக காத்திருக்கும் சிறிய ஆசீர்வாதம், உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடும். அன்பானவர்களே, ஆண்டவர் உங்களை தம் சந்தோஷத்தினால் நிரப்புவார். விசுவாசத்துடன் அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, அன்பு நிறைந்த வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உள்ளத்தில் தாழ்மையும் எளிமையுமானவர்களுக்கு தயவுசெய்யும் உம்மை துதிக்கிறேன். ஆண்டவரே, மக்கள் என்னை கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிந்தாலும், என் பெயரையும் இருதயத்தையும் நீர் அறிந்திருக்கிறீர் என்று அறிந்து களிகூருகிறேன். எந்தச் சூழ்நிலையாலும் பறிக்க முடியாத உம் சமாதானத்தினால் என்னை இன்று நிரப்பும். உம் நன்மையை மற்றவர்களோடு நான் பகிர்ந்துகொள்ளும்படி உம் சந்தோஷம் எனக்குள் நிரம்பி வழியட்டும். சிறிய ஆசீர்வாதங்கள்கூட உம்முடைய பலத்த கரங்களின் மகத்தான நோக்கத்தையுடையவையாக இருக்கும் என்று நம்புவதற்கு எனக்கு உதவி செய்யும். என்னை தெய்வீகமான முறையில் ஆசீர்வதிக்கும்படி நீர் எனக்கு அருகில் இருக்கிறீர் என்று விசுவாசத்துடனும் நன்றியுடனும் முற்றிலும் நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.
உங்கள் ஆசீர்வாதத்தின் நாள்


தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now

