அன்பானவர்களே, இன்றைக்கு, "உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்" (ஏசாயா 41:13) என்ற வசனத்தை தியானிப்போம். வலதுகரம் எதைக் குறிக்கிறது? பெரும்பாலான வேலைகளை வலதுகையைக் கொண்டே செய்கிறோம். தேர்வு எழுதவும், பணத்தைக் கொடுக்கவும், அன்றாட வேலைகளைச் செய்யவும், சாப்பிடவும் வலதுகையையே பயன்படுத்துகிறோம். இன்று தேவன், "நான் உன் வலதுகையைப் பிடிக்கிறேன்," என்று சொல்கிறார். அவர், "பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்," என்று கூறுகிறார். நீங்கள், "நான் எதைச் செய்தாலும் வாய்க்கவில்லை. என்னுடைய வேலையில், படிப்பில் என்னால் வெற்றியடைய முடியவில்லை. என்னுடைய வேலையில் எந்த பலனையும் பார்க்க இயலவில்லை," என்று சொல்லலாம். ஆனால், தேவன் இன்று தம்முடைய நீதியின் வலதுகரத்தினால் உங்கள் வலதுகரத்தைப் பிடிப்பதாக வாக்குக்கொடுக்கிறார்.

தேவனுடைய வலதுகரத்தில் என்ன வல்லமை இருக்கிறது? "கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது" (யாத்திராகமம் 15:6) என்று வேதம் கூறுகிறது. அதுதான் தேவனுடைய கரத்தில் இருக்கும் வல்லமை. தேவன், "திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்" (ஏசாயா 41:10) என்று கூறுகிறார். ஆம், தேவனுடைய வலதுகரம் உங்களைப் பலப்படுத்தும்; உங்களுக்கு சகாயம்பண்ணும்; விழுந்துபோவோம் என்று நீங்கள் நினைக்கிற சூழ்நிலையில் உங்களைத் தாங்கும். இயேசு, தண்ணீரின்மேல் நடந்து வருகிறதை பேதுரு பார்க்கிறான்; அவரிடம் செல்வதற்கு விசுவாசத்துடன் அடியெடுத்து வைக்கிறான். ஆனால், அவன் சுற்றிலும் பார்க்கும்போது புயலை, கொந்தளிக்கிற கடலை, அலைகளை கண்டு இயேசுவின்மேல் உள்ள கவனத்தை திருப்பிவிடுகிறான். அவனுடைய கண்கள் இரட்சகரை விட்டுவிட்டு புயலின்மேல் திரும்புகின்றன; அவன் மூழ்க தொடங்கினான் (மத்தேயு 14:28-32).

அநேகவேளைகளில் நாம் இயேசுவை நோக்கும்போது, விசுவாசத்தில் அடியெடுத்து வைக்கிறோம்; ஆனால், பிரச்னைகளும் உபத்திரவங்களும் எழும்பும்போது, நம் கண்களை அவரை விட்டு விலக்கி, நம்மைச் சுற்றி வீசும் புயலை பார்க்கிறோம்; மூழ்க தொடங்குகிறோம். பேதுருவைப்போல நாம் விழுந்துபோகிறோம். அவர் தம் கையை நீட்டி பேதுருவைப் பிடித்தார். "உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்" (வசனம் 31). அப்படியே நீங்களும் மூழ்கும்போது, இயேசு தம் கையை நீட்டுவார்; உங்கள் வலதுகையைப் பிடிப்பார்; உங்களைத் தூக்குவார். தம்முடைய நீதியின் வலதுகரத்தினால் உங்களை தாங்குவார்; பலப்படுத்துவார்; பிரச்னைகளை கடந்து வர உதவுவார். ஆம், அவரது கரம் வல்லமையுள்ளது; மகத்துவமான அதிகாரமுள்ளது; அது சத்துருவை முறியடிக்கும். அவரது மகத்துவமான, வல்லமையுள்ள கரம் எல்லா பிரச்னைகளிலுமிருந்தும் உங்களைத் தூக்கியெடுக்கும். "என்னைச் சுற்றிலும் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன; நான் அமிழ்ந்துபோகிறேன்," என்று இன்றைக்கு சொல்வீர்களானால், தேவன், உங்களைப் பிடிக்க தம் கரத்தை நீட்டுகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவர் உங்களைத் தூக்கியெடுப்பார்; உங்கள் கரத்தைப் பிடித்திருக்கிறார்; பயப்படாதிருங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, தேவனாகிய கர்த்தராகிய நீர், என் வலதுகையைப் பிடித்து, "பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்," என்று வாக்குக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் பலவீனமாக உணரும் தருணங்களிலும், பிரச்னைகள் என்னை மூழ்கடிக்கும்வேளையிலும் உம்முடைய நீதியின் வலதுகரம் என்னை இரட்சிக்க வல்லது என்று எனக்கு நினைவுபடுத்தும். புயலின் மத்தியில் நீர் பேதுருவைப் பிடித்ததுபோல என்னையும் பிடிப்பீர் என்று அறிந்திருக்கிறேன். ஆண்டவரே, தயவுசெய்து இன்று என் கையைப் பிடித்தருளும். என்னைப் பலப்படுத்தி, தாங்கி, எல்லா புயல்களின் வழியாகவும் என்னை நடத்தும். உம்முடைய வழுவாத பிடியின்மேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். நீர் என்னோடு இருப்பதினால் நான் பயப்படமாட்டேன் என்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன், ஆமென்.