அன்பானவர்களே, இன்று, "அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார்" (சங்கீதம் 148:14) என்ற வசனத்தை தியானிப்போம். தேவன், தம் மக்களுக்கு பெலனை, செழிப்பை, மகிமையை, நற்பெயரை அளிப்பார். கொம்பு, தேவன் அருளும் பெலனுக்கும் மகிமைக்கும் அடையாளமாக இருக்கிறது. வேதம், "தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்" (லூக்கா 1:75) என்று கூறுகிறது. யார் இந்த இரட்சணியக்கொம்பு? அவர் உலக இரட்சகராகிய இயேசு.
இயேசு, உங்களுக்கு இருக்கும் எல்லா சவால்களிலிருந்தும் உங்களை விடுவிப்பார். இயேசு என்னும் பெயருக்கு உலகை இரட்சிப்பவர் என்று அர்த்தம். அவரே நம் மீட்பரும் நம்மை விடுவிக்கிறவருமாயிருக்கிறார். அவர் நமக்கு எல்லாமுமாயிருக்கிறார். ஆகவேதான் வேதம், "அமர்ந்திருந்து அவரே தேவன் என்று அறிந்துகொள்ளுங்கள்," என்று கூறுகிறது. இயேசு, நம் தலையின்மேல் இருக்கும் கொம்பாக உள்ளார். பிசாசு நமக்கு விரோதமாக வரும்போது, தேவன் நம்மேல் வைத்துள்ள கொம்பை காணுவான்.
சென்னை வானகரத்தில் எங்கள் கூட்டம் ஒன்றில், ஆராதனை வேளை நடந்துகொண்டிருந்தது. பிசாசு பிடித்திருந்த இளம் பெண் ஒருத்தி, அலறியதோடு, சாத்தானின் வல்லமையையும் காண்பித்தாள். கூட்டத்தினர் அனைவருக்கும் அது தொந்தரவாயிருந்தது. ஆகவே, நான் என் ஊழியர்களை அவளை கூட்ட அரங்கிற்கு வெளியே கொண்டு போகும்படி கூறினேன். வெளியேயும் அவள் தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தாள். ஜெப வீரர்கள் அவளை கட்டுப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால், இன்னும் அதிகமாக அலறினாள். அந்த இளம்பெண்மேல் நான் மனதுகினேன். அவள்மேல் என் கையை வைத்ததும் பிசாசு அவளை விட்டுச் சென்றது. நான் வியப்படைந்து, தேவனை அதிகமாய் ஸ்தோத்திரித்தேன். அந்தப் பெண்ணை நான் பார்த்தபோது, அவள் கண்ணாடி உடைந்திருந்ததையும், முகம் பொலிவிழந்திருந்ததையும் கண்டேன். ஆண்டவர் அவளை விடுவித்த பிறகு, அவள் புன்னகைத்தாள். அவளது மகிமையும் பெலனும் திரும்பின. ஆம், இயேசு நம் இரட்சணியக்கொம்பாக இருக்கிறார். நம் மகிமையை பெருகப்பண்ணுகிற, சத்துருக்களுக்கு மேலாக நம்மை உயர்த்துகிற கொம்பாக அவர் இருக்கிறார்.
யாராவது வேலையில், தொழிலில் ஆசீர்வதிக்கப்பட்டு பெருமையடைந்தால், மக்கள் சிலவேளைகளில், "உனக்கு கொம்பா முளைத்திருக்கிறது?" என்று வேடிக்கையாக கேட்பார்கள். அம்மனிதர், மகா உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டபடியால் இப்படி கேட்பார்கள். அவ்வண்ணமே, இயேசு நம் வாழ்க்கைக்குள் வரும்போது, நம் கொம்பை உயர்த்துகிறார்; நமக்கு பெலனும் செழிப்பும் மகிமையும் நற்பெயரையும் தருகிறார். அதற்காகவே அவரை தொடர்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோம். நம்மை பிரஸ்தாபிக்கவோ, நம் சாதனைகளை பறைசாற்றவோ அல்லாமல் ராஜாதி ராஜாவை துதிப்பதற்காகவே நாம் உருவாக்கப்பட்டிருக்கிறோம். ஆம், கர்த்தர் தம் ஜனங்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தியுள்ளார். அவர் உங்களைப் பெலப்படுத்துவார்; கனப்படுத்துவார்; மகா உயரங்களுக்கு உயர்த்துவார். ஆகவே, அதைரியப்படாதீர்கள். இயேசுவால் நீங்கள் ஆசீர்வாதமும் செழிப்பும் அடைவீர்கள். இப்போதும் உங்கள் வாழ்க்கையில் இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவரது தயையை அனுபவியுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் இரட்சணியக்கொம்பும் பெலனும் மகிமையும் இரட்சகராகவும் விடுவிக்கிறவராகவும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்வின் மையமாக விளங்கும்; எல்லா சவால்களுக்கும், சத்துருக்களுக்கும் மேலாக என்னை உயர்த்தும். என்னை பெலப்படுத்தியருளும். நான் இழந்த எல்லா மகிமையையும் திரும்ப அளித்தருளும். உம் சமுகம் என்னில் விளங்கட்டும்; நான் செல்லும் இடமெல்லாம் ஆசீர்வதிக்கப்படட்டும். பிறரை விடுவிப்பதற்கு என்னை பயன்படுத்தும்; அநேகருக்கு நான் ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்யும். மிகவும் சிரமத்தோடு நான் உமக்கு ஊழியம் செய்வதால், என்னை கனப்படுத்தி, உயர்த்தியருளும். நிந்தையை அனுபவித்த இடத்திலெல்லாம் கனத்தைக் கொடுத்து, தலையை உயர்த்தி நடக்கப்பண்ணும். உம் இரட்சிப்பு, பெலன், செழிப்பு, மகிமை, ஆசீர்வாதம் என்மேல் தங்கியிருக்கட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


