அன்பானவர்களே, "எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்" (பிலிப்பியர் 4:7) என்பதே இன்றைய வாக்குத்தத்த வசனம். இந்த தெய்வீக சமாதானம் மனுஷீக புரிதலுக்கு அப்பாற்பட்டது. சமாதானமான காரியங்களை யோசிப்பதுடன் இதனை எளிமையாக ஒப்பிட முடியாது. அது, இயல்பான தர்க்கரீதியான யோசனைகளுக்கும் அப்பால் நம்மை கொண்டு சென்று, இருதயங்களையும் சிந்தையையும் கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கிறது. அது இயேசுவின் எண்ணங்களை நம் இருதயங்களுக்குள் கொண்டு வந்து, அவரது வழிகளை புரிந்துகொள்ள உதவுகிறது. தேவன் நம் சிந்தையோடும் இருதயத்தோடும் பேசுகிறார்; அவரது குரல் வாயிலாக நாம் மெய்யான சமாதானத்தை அனுபவிக்கிறோம்.
மிகவும் மனஞ்சலித்துப்போயிருந்தபோது இதை நானும் அனுபவித்திருக்கிறேன். "ஆண்டவரே, என் வாழ்விலுள்ள குறைவைப் பாரும். ஊழியத்திலும், ஆவிக்குரிய வாழ்விலும், குடும்பத்துக்கும், உமக்கான வேலையிலும், என்னுடன் பணிபுரிகிறவர்களுக்கும் நான் போதுமானவற்றைச் செய்திடவில்லை. ஆண்டவரே, நான் அப்பிரயோஜனமானவன்; போதுமானவன் அல்ல," என்று உள்ளத்தைக் கொட்டி கண்ணீரோடு ஜெபித்தேன். "ஆண்டவரே, நான் மிகவும் மனஞ்சலித்துப்போயிருக்கிறேன்," என்றபோது, திடீரென பரிசுத்த ஆவியானவர் என் உள்ளத்தை நிறைப்பதை உணர்ந்தேன். அவர் வந்ததும், மகத்தான அமைதி என்னை நிரப்பியது. பரிசுத்த ஆவியானவரின் பாஷை என் வாயிலாக பாய தொடங்கியது.

அந்த பாஷைகளில் நான் பேசியபோது, பரிசுத்த ஆவியானவரின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். அவர், என்னைக் குறித்து தேவனிடம் சாட்சி கூறினார். "இவன் சாம். இந்தத் திட்டங்களையெல்லாம் இவனுக்காக வைத்திருக்கிறீர். இன்னின்ன அதிகாரத்தை இவனுக்குக் கொடுத்திருக்கிறீர். இவனுக்கென்று இந்தப் பாதையை வைத்திருக்கிறீர்," என்று எல்லா விவரங்களையும் வெளிப்படுத்தினார். என்னுடைய குறைவுகள் எல்லாவற்றையும் மறந்து, பரிசுத்த ஆவிக்குள் அதிகமாய்ப் பெலப்பட்டேன். தேவனின் எண்ணங்கள், பாதைகள் என்று என்னை புதிய பரிமாணத்திற்குள் அவர் என்னை உயர்த்தினார். இப்படியே அவரது சமாதானம் நம்மை நடத்துகிறது. நாம் தேவனுடைய வழிகளைப் புரிந்துகொள்ளும்போது, அவரது நினைவுகள் நம்மை நிரப்புவதற்கு இடங்கொடுக்கும்போது, இயற்கைக்கு அப்பாற்பட்ட இந்த சமாதானத்தை அனுபவிக்கிறோம். அவர் தம் வார்த்தையாகிய வேதத்தின் வாயிலாக நம் இருதயங்களுக்குள் பேசுகிறார். தீர்க்கதரிசனத்தின் வாயிலாக பல்வேறு தருணங்களில் பேசுகிறார். பரிசுத்த ஆவியின் பாஷைகள் வாயிலாகவும் பேசுகிறார். இந்த எல்லா தருணங்களிலும் அவரது சமாதானம் நம்மை நிரப்புகிறது. இது, எந்த மனுஷ மனமும் உருவாக்குவதற்கு அப்பாற்பட்ட சமாதானமாகும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எல்லாப் புத்திக்கும் மேலான உம் பூரண சமாதானத்தினால் என் உள்ளத்தையும் சிந்தையையும் நிறைத்தருளும். நான் நிறைவாக உணராதபோது, மனஞ்சலித்துப்போகும்போது, பிரயோனமற்றவன்(ள்) என்று நினைக்கும்போது, பிரச்னைகளால் மலைத்துப்போய் நிற்கும்போது சூழ்நிலைகளைத் தாண்டி உம்மைப் பார்க்க உதவும். மனுஷீக கவலைகளுக்கு மேலாக என் எண்ணத்தை உயர்த்தி, என் வாழ்வைக் குறித்த உம் வழிகளையும் நினைவுகளையும் புரிந்துகொள்ள கற்றுக்கொடுத்தருளும். உம் வார்த்தை, உம் சத்தம், பரிசுத்த ஆவியானவர் என்னை அனுதினமும் வழிநடத்தட்டும். உம் பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி, உம் அன்பையும் நம்பிக்கையையும் தீர்வுகளையும் என் இருதயத்துக்குள் உரைப்பீராக. என் இருதயத்தையும் சிந்தையையும் கிறிஸ்து இயேசுவுக்குள் காத்துக்கொண்டு, என் வாழ்வில் எப்பக்கமும் அற்புதங்களைச் செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.