அன்பானவர்களே, தமது பிள்ளைகளான நம்மை இன்று பெரியவர்களாக்கும்படியாக ஆண்டவர் வாஞ்சிக்கிறார். வேதம், "என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்" (சங்கீதம் 92:10) என்று கூறுகிறது. மிகுந்த விரோதத்தின் நடுவில் இருந்தபோது சங்கீதக்காரன் 92ம் சங்கீதத்தை எழுதியுள்ளான். துன்புறுத்தும், உபத்திரவப்படுத்தும் மக்களால் அவன் சூழ்ந்துகொள்ளப்பட்டான்; அவர்கள் அவனுக்கு பெரிய பிரச்னைகளை உண்டாக்கினர். எல்லா இக்கட்டுகளின் நடுவிலும் அவன், "என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்" என்று கூறுகிறான்.
கர்த்தர் இதையே உங்களுக்கும் செய்ய விரும்புகிறார். நீங்கள் மக்களால் துன்புறுத்தப்படலாம்; உபத்திரவப்படுத்தப்படலாம். அதிக நிந்தையின் வழியாக கடந்து செல்லலாம். கர்த்தருக்காக இவற்றையெல்லாம் பொறுமையாய் சகித்துக்கொண்டிருக்கலாம். இப்போது கர்த்தர், "இது நான் என் பிள்ளையை உயர்த்தவேண்டிய நேரம். அவன் / அவள் எனக்காக பொறுமையாக இருந்தான்(ள்)," என்று கூறுகிறார். வேதத்தில், "என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்" (சங்கீதம் 23:5) என்று எழுதப்பட்டுள்ளது. விரோதிக்கிறவர்கள் முன்பாகவே கர்த்தர் உங்களை உயர்த்துவார்.
மொர்தெகாய்க்கு அப்படியே நடந்தது. ராஜாவின் பிரபுக்களில் உயர்ந்தவனாயிருந்த ஆமான், மொர்தெகாயின் மக்களாகிய யூதர்களை அழித்துப்போடும்படி ராஜாவை நடத்தினான். அந்தச் சூழ்நிலையில் மொர்தெகாய் ஜெபித்ததுடன், தன் சிறிய தகப்பன் மகளாகிய எஸ்தர் ராஜாத்தியிடம் ஏதாகிலும் செய்யும்படி வற்புறுத்தினான். கர்த்தர் தம் ஜனங்களைப் பாதுகாப்பார் என்று அவரது வல்லமையை விசுவாசித்தான்.
என்ன நடந்தது? தேவன், சூழ்நிலையை தலைகீழாய்த் திருப்பினார். மொர்தெகாய்க்கு ஆமான் திட்டமிட்டிருந்த மரணம், அவனுக்கே சம்பவித்தது. மொர்தெகாய்க்கு செய்திருந்த தூக்குமரத்திலே ஆமானையே தூக்கிப்போடும்படி ராஜா உத்தரவு பிறப்பித்தான். ராஜா, தன் அரண்மனையில் மொர்தெகாயை கனமுள்ள உயர்ந்த அதிகாரியாக அமர்த்தினான். எப்படிப்பட்ட மாற்றம்! தேவன் உங்களை மக்கள் முன்பாகவும், உங்களை விரோதிக்கிறவர்கள் முன்பாகவும் உயர்த்துவார். இதை கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொள்வோமா?
இன்று, ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உயர்த்த விரும்புகிறார். உங்களை மாத்திரமல்ல, உங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் உயர்த்துவதாக அவர் கூறுகிறார். உங்கள் பிள்ளைகள் செழிப்பார்கள்; படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் மனைவி / கணவர் செழிப்பார்கள். உங்கள் குடும்பத்தில் அனைவரும் உயர்த்தப்படுவார்கள்; ஆண்டவர், அவரது அபிஷேக தைலத்தை அவர்கள்மேல் பொழிந்து வல்லமையானவிதத்தில் பயன்படுத்துவார். ஆண்டவர் உங்களைப் பெருகப்பண்ணி, தம் பிள்ளையாகக் காட்டுவார். உங்களுக்கு உயர்வின் வேளை வந்திருக்கிறது. தேவனுக்கே மகிமை செலுத்துங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் கண்களை எங்கள்மேல் வைத்திருப்பதற்காகவும், எங்கள்மேல் கிருபையாயிருப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் பிள்ளைகள் அநேகர் உம் நிமித்தம் வெட்கத்தை, வேதனையை, உபத்திரவங்களை சகிக்கிறார்கள். ஆண்டவரே, அவர்களை நினைத்தருளும். இக்கட்டுகளின் நடுவே உம் கரம் அவர்கள்மேல் வருவதாக. விரோதிகள் முன்பாக அவர்களை உயர்த்தும்; சூழ்நிலைகள் எல்லாவற்றையும் அவர்களுக்கு நன்மையாக மாற்றிடும். அவர்கள் பிள்ளைகளின் படிப்பை ஆசீர்வதித்தருளும்; அவர்கள் குடும்பத்தில் எல்லோரையும் செழிக்கப்பண்ணும். உம் அபிஷேக தைலத்தை அவர்கள்மேல் ஊற்றி, உம் மகிமைக்கென அவர்களை வல்லமையாக பயன்படுத்தும். அவர்களைப் பெருகப்பண்ணி, உம் பிள்ளையாக நிலைப்படுத்தும். இது அவர்களுக்குத் தெய்வீக உயர்வின் காலமாக அமையட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


