அன்பானவர்களே, இன்றைக்கு தியானிப்பதற்காக, "பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது" (சங்கீதம் 103:11) என்ற அருமையான வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு பரந்த, அளவிடமுடியாத அன்பு! சங்கீதக்காரனாகிய தாவீது, "உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது" (சங்கீதம் 57:10) என்று அறிக்கையிடுகிறான். தேவ அன்பை எந்த மனுஷீக அளவினாலும் அளவிடமுடியாது. அதன் ஆழம் ஆராய்ந்து முடியாதது; அகலம் முடிவற்றது; உயரம் வானங்களை எட்டுவதாக உள்ளது. ஆண்டவரின் அன்பு மகா பெரிதாக இருப்பதால், அவர் நம் பாவங்கள் அத்தனையையும் மன்னிக்கிறார்; நம் காயங்கள் எல்லாவற்றையும் ஆற்றுகிறார்; நம்முடைய முறிவுகளை எல்லாம் சீர்ப்படுத்துகிறார். அதே அன்பு தான் இயேசுவை சிலுவை வரைக்கும் வழிநடத்தியது. தம்முடைய மகா அன்பினால், அவர் தம் ஜீவனைக் கொடுத்தார்; அடிக்கப்படுவதற்கு தம் சரீரத்தையும், மீட்புக்காக சிந்தப்பட தம் இரத்தத்தையும் கொடுத்தார். என்னே ஓர் இரட்சகர்! அவருக்கானவற்றில் நாம் தவறினாலும்கூட, அவர் மறுபடியும் மறுபடியும் நம்மை மன்னிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார். அவரது இரக்கம் ஒருபோதும் குறைந்துபோகாது. வேதம், "என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்" (ஏசாயா 38:17) என்று கூறுகிறது. எவ்வளவு ஆறுதலான சத்தியம்! அவரது மகா அன்பினால், நம் பழைய தவறுகளை நினைவில் வைக்க தேவன் மறுக்கிறார். தாழ்மையான இருதயத்துடன் அவரிடம் வரும்போது, அவர் நம்மை தழுவிக்கொண்டு, "என் பிள்ளையே, நான் உன்னை மன்னித்துவிட்டேன்," என்கிறார்.

அன்பானவர்களே, நிபந்தனையற்ற இந்த அன்பை புரிந்துகொள்ளும்படி ஒரு சிறிய கதையை பகிர்ந்துகொள்கிறேன். என் அப்பா, சின்னப் பையனாக இருந்தபோது, தன் சிநேகிதனோடு விளையாடினார். அவர் தின்பண்டங்களை தின்று கொண்டிருந்தார். அவரது சிநேகிதன், கொஞ்சம் தரும்படி கேட்டபோது, என் அப்பா, குறும்பாக கொஞ்சம் சுண்ணாம்பை கொடுத்துவிட்டாராம். அந்தப் பையனின் நாக்கு வெந்துவிட்டது. தொண்டையும் புண்ணாகிவிட்டது. அந்தச் சிநேகிதனின் அம்மா, என் பாட்டியிடம் புகார் கூறும்படி கோபத்துடன் வந்தார்கள். ஆனால், என் பாட்டி தன் மகன்மேல் கொண்டிருந்த ஆழமான அன்பினால், "என் மகன் தங்கம். அவன் அப்படியெல்லாம் செய்திருக்கமாட்டான்," என்று மறுத்தார்கள்.  என் தந்தையின் பெயர் தங்கசாமி. தாயின் அன்பு, தன் பிள்ளையின் தவற்றை கவனிக்க முடியாமல் செய்தது. அதேபோன்று அன்பானவர்களே, நம் பரம தகப்பனும், இயேசுவின் இரத்தத்தின் வழியே நம்மை காண்பதால், "என் மகன் / மகள், தங்கம். நான் அவர்களை மன்னிப்பேன்," என்று சொல்லுகிறார். தேவனுடைய மகா அன்பு இத்தகையது. அது திரளான பாவங்களை மூடக்கூடியது (1 பேதுரு 4:8). நீங்கள் எவ்வளவு தூரமாக போயிருந்தாலும், அவரது கரங்கள் உங்களை மறுபடியும் சேர்த்துக்கொள்ளும்படி விரிக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் இருக்கிறவண்ணமாகவே இயேசுவிடம் வாருங்கள். உங்கள் பழைய காலத்தைக் குறித்துப் பயப்படாதிருங்கள். உங்கள் பாவத்தைக் காட்டிலும் அவரது அன்பு பெரியது; உங்கள் தோல்வியைக் காட்டிலும் அவரது மன்னிப்பு ஆழமானது.

அவரது அன்பு அதிகம் சிறந்தது. ஆகவே, உலகம் நம்மை நிராகரித்தாலும் நாம் நம்பிக்கையாயிருக்கலாம். மக்கள் உங்களை தவறுகளை நினைவுப்படுத்தி உங்களைக் குற்றஞ்சாட்டலாம். ஆனால் தேவன், "உன் பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிட்டேன்" என்று கூறுகிறார் (மீகா 7:19). அவரது அன்பு உங்கள் இருதயத்தை நிரப்பும்போது, குற்றம் இல்லாத, வெட்கமில்லாத, தீர்ப்பில்லாத புதிய வாழ்க்கையை வாழ தொடங்குவீர்கள். உங்கள் பழைய வழிகளில் தொடர்ந்து இருக்கும்படியாக அல்ல; அவருக்குப் பிரியமான பிள்ளையாக, அவரது மகிமையில் பிரகாசிக்கும்படியாக எழும்புவதற்கு அவர் உங்களை அழைக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. ஆகவே, இன்றே உங்கள் இருதயத்தை இயேசுவுக்கு அர்ப்பணியுங்கள். அவர் உங்களை சுத்தமாக கழுவட்டும்; உங்கள் மகிழ்ச்சியை திரும்ப அளிக்கட்டும்; உங்களை மகா உயரங்களுக்கு உயர்த்தட்டும். நம் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும் அனுபவத்தை பெறுவது மெய்யாகவே சந்தோஷமானது. அன்பானவர்களே, உங்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்பாதிருங்கள். தேவனை நெருங்கியே நடந்திடுங்கள். அவரது அன்பு உங்களைச் சூழ்ந்துகொள்ளட்டும்; உங்களை நிரப்பட்டும்;உங்களைப் பூரணராக்கட்டும். அவரது மகா அன்பு உங்களை தழுவிக்கொள்ளும்; பெலப்படுத்தும்; வரும் நாட்களில் உங்களை பத்திரமாக சுமந்துசெல்லும்.

ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, நீர் என்மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்புக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் மூலமாக என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிப்பதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, உம்முடைய அன்பின் அகலத்தையும் ஆழத்தையும் புரிந்துகொள்ள எனக்கு உதவும். உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை கழுவி பரிசுத்தமாக்கும். உம்முடைய தெய்வீக மனதுருக்கத்தினால் என்னை தழுவிக்கொள்வீராக. எந்தப் பாவமோ, குற்றமோ உம்மிடமிருந்து என்னை மறுபடியும் பிரிக்காதிருக்கட்டும். ஆண்டவரே, என் உள்ளத்தை சமாதானத்தினாலும் பரிசுத்தத்தினாலும் நிரப்பும். உம்முடைய அன்பும் பாதுகாப்பும் என்னை சூழ்ந்துகொள்ளச் செய்யும். உம்முடைய கிருபையால் என்னை மகா உயரங்களுக்கு உயர்த்தவேண்டுமென்று இயேசு என்னும் மகத்தான அன்பின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.