அன்பானவர்களே, தேவன், உங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிக்க விரும்புகிறார். நீங்கள், தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக பரிபூரணராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். இன்றைய வாக்குத்தத்தம், "அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள்" (அப்போஸ்தலர் 10:43) என்று கூறுகிறது. ஆம், இயேசு சிலுவைக்குச் சென்றபோது, அவர் அருகில் அறையப்பட்டிருந்த கள்ளன், "நீர் உம் ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தளும்," என்று முறையிட்டான் (லூக்கா 23:43). அதற்கு இயேசு அன்புடன், "மெய்யாகவே, நீ இன்று என்னுடன் பரதீசிலிருப்பாய்," என்று கூறினார். மக்கள் அவர் இரத்தத்திற்காக கூக்குரலிட்டுக்கொண்டிருந்தபோது, இயேசு, "பிதாவே, இந்த மக்களை மன்னியும். இவர்கள், அநியாயமாய் என்னை சிலுவையில் அறைந்தார்கள். இவர்கள் எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, என்னை சிலுவையில் அறைந்தார்கள். ஆனாலும், நாம் உம் மன்னிப்புக்காக வேண்டுகிறேன். இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்," என்று கூறினார். அவர், தன் மன்னிப்பின் வாயிலாக தம் மரணத்தை மேற்கொண்டார். ஆம், அவர் மன்னித்தபோது, தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார். உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்படைத்தால் நீங்களும் மக்களுக்கு ஆசீர்வாதமானவராக எழும்ப முடியும்.

இரண்டாவதாக, மன்னிப்பு சமாதானத்தை அளிக்கிறது. இயேசு, விலையுயர்ந்த தைலத்தை தன் சிரசின்மேல் ஊற்றிய,  கண்ணீரால் தன் பாதத்தைக் கழுவிய பெண்ணிடம், "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. சமாதானத்தோடே போ," என்று கூறினார் (லூக்கா 7:50). அந்தப் பெண் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டாள்; பாவத்தின் சாபத்திலிருந்து குணப்பட்டாள்.

மூன்றாவதாக, இயேசு, திமிர்வாதம் பாதித்திருந்த மனுஷனிடம், "மகனே, திடன்கொள். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன," என்று கூறினார் (மத்தேயு 9:2). அந்த மனுஷன் உடன்தானே குணமாக்கப்பட்டான். மன்னிப்பது ஆத்துமாவை சுத்திகரிப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையை குணமாக்குகிறது; சீர்ப்படுத்துகிறது; சமாதானத்தை அளிக்கிறது.

தேவ மக்கள் ஜெபிக்கும்போது தாம் தேசத்திற்கு க்ஷேமத்தைக் கட்டளையிடுவதாக தேவன் கூறுகிறார் (2 நாளாகமம் 7:14). இன்று, தேவன் உங்களுக்கும் அதே ஆசீர்வாதத்தை அருள விரும்புகிறார். அவர் உங்களைக் குணப்படுத்த, உங்கள் பாவங்களைக் குணமாக்க, பாவத்தின் சாபத்தை குணமாக்க, தேசத்தை குணமாக்கவும் செழிக்கப்பண்ணவும், தேசம் உங்களுக்குப் பெரிய பலனை தரப்பண்ணவும் விரும்புகிறார். நீங்கள், உடைந்துபோயிருப்பதாக, பாரப்பட்டதாக உணர்ந்தாலும், இயேசு உங்களை தம்மண்டை வருமாறு அழைக்கிறார். அவரது மன்னிப்பினால், அவர் உங்களை எழுப்புவார்; உங்கள் உள்ளத்தை சமாதானத்தினால் நிரப்புவார்; உங்கள் வாழ்க்கையை முற்றிலுமாக சரிப்படுத்துவார்; அநேகருக்கு உங்களை ஆசீர்வாதமாக வைப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் பாவங்கள், பாரங்கள், பெலவீனங்கள் அனைத்தோடும் உம் முன்னே வருகிறேன். உம் பெரிதான அன்பினாலும் இரக்கத்தினாலும் என்னை மன்னிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் இருதயத்தை கழுவி, தேவனுக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும் என்னை சுத்தமாக்கும். என்னை உம் சமாதானத்தால் நிரப்பும்; என்னிலிருந்து எல்லா அக்கிரமத்தையும் வெட்கத்தையும் அகற்றும். பாவத்தினால் ஏற்பட்ட எல்லா காயத்தையும் குணப்படுத்தும்; என் ஆத்துமாவை முற்றிலும் சீர்ப்படுத்தும். அனுதினமும் என் வாழ்க்கையை உம் கரங்களுக்குள் பூரணமாக ஒப்படைக்க உதவும். என்னுள்ளத்திற்குள் உம் மன்னிப்பு சுகத்தை, சந்தோஷத்தை, விடுதலையை அளிக்கட்டும். என் வாழ்க்கையை செழிப்பாக்கி, மற்றவர்களுக்கு நான் ஆசீர்வாதமாக விளங்கப்பண்ணும். என்னைக் குறித்து ஒருபோதும் மனஞ்சலிக்காதிருப்பதற்கும், நிபந்தனையின்றி என்னை நேசிப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.