அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்" (சங்கீதம் 37:23) என்று கூறுகிறது. அனுதினமும் தேவன் நம்முடன் நடந்து, செல்லவேண்டிய வழி எது என்று காட்டுகிறார் என்பதை தெரிந்துகொள்வது எவ்வளவு சத்தியம்! இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தின் வழியாக போனபோது, கர்த்தர் அவர்களுடன் சென்றார்; தினமும் காலையில் மன்னாவைக் கொடுத்தார். அந்த மன்னாவின் பெலத்தினால், அவர்களால் நாள் முழுவதும் நடப்பதற்கு முடிந்தது. அதேபோன்று, நாம் நாள் முழுவதும் தம்முடன் நடக்கும்படி ஆண்டவர் தம் வார்த்தையைக் கொடுக்கிறார். வேதம், "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம் 119:105) என்று கூறுகிறது. தேவனுடைய வார்த்தையை நம் உள்ளத்தில் வைத்து, அதன்படி நடந்தோமானால், நம்மால் தேவனுடன் நடக்க முடியும்; நம் வழியில் அவர் பிரியப்படுவார்.

"உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்" (சங்கீதம் 119:103) என்று வேதம் கூறுகிறது. ஆம், கர்த்தர், நாம் இடறுகிறதற்கு இடங்கொடுக்கமாட்டார். அனுதினமும் ஏற்ற வார்த்தையைக் கொடுத்து நம்மை பாதுகாப்பார். அதைத்தான் வேதம், "பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே," என்று கூறுகிறது (ஏசாயா 48:17). இந்த வசனத்திலிருந்து நாம் சிறந்த சத்தியத்தைப் பெற்றுக்கொள்கிறோம். மக்கள், அநேக ஆலோசனைகளைக் கூறலாம்; ஆனால், கர்த்தரே நம் நடைகளைக் கட்டளையிட்டு, நம் வழியில் பிரியப்படுகிறவராயிருக்கிறார்.

அவர் தம் வார்த்தையை மாத்திரம் அருளவில்லை; தம் வார்த்தையை நம் இருதயங்களிலும் வைக்கிறார். வேதம், "அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை" (சங்கீதம் 37:31) என்று கூறுகிறது. ஆம், நல்ல மனுஷனின் நடைகள் கர்த்தரால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்; அவன் வழியில் கர்த்தர் பிரியப்படுகிறார். கர்த்தருடைய வார்த்தையில் நாம் பிரியமாயிருந்தால், நம் வழியிலும் அவர் பிரியமாயிருப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் வார்த்தையினால் என் அடிகளை வழிநடத்தி, எனக்குப் பாதை காட்டுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தினமும் உம் வார்த்தையின்படி நடந்து, உம் வழிகளைப் பின்பற்றுவதற்கு எனக்கு உதவும். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ற வார்த்தையையும் ஞானத்தையும் எனக்கு அருளிச்செய்திடும். பாவத்திற்கு என்னை விலக்கி, இடறாதபடி காத்தருளும். உம் வசனம் என் கால்களுக்குத் தீபமாயும் என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருப்பதாக. என் உள்ளத்தின் ஆழத்தினுள் உம் வார்த்தையை வைத்து, நீதியில் என் நடைகளை உறுதிப்படுத்துவீராக. நன்மையானவற்றை எனக்குப் போதித்து, போகவேண்டிய பாதையில் என்னை நடத்துவீராக. நான் உம் வசனத்தில் விருப்பமாயிருப்பதால் என் வாழ்க்கை உமக்குப் பிரியமானதாயிருப்பதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.