அன்பானவர்களே, இன்றைக்கு நாம், "நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்" (1 இராஜாக்கள் 9:3) என்ற வசனத்தை தியானிப்போம். தேவனை பார்ப்பதும் அவர் பேசுவதைக் கேட்பதும் எவ்வளவு சந்தோஷம்! கர்த்தர், சாலொமோனுக்கு இரண்டாம் விசை தோன்றியது, அவர் இஸ்ரவேல் மக்கள்மேல் எவ்வளவு பிரியமாயிருந்தார் என்பதையும், தாவீதின் சந்ததியினரை எவ்வளவாய் நேசித்தார் என்பதையும் காட்டுகிறது. சாலொமோன் ராஜாவானவுடன் முதல் முறை அவன் தேவனிடம் ஐசுவரியத்தைக் கேட்காமல் ஞானத்தைக் கேட்டான். இரண்டாம் முறை சாலொமோன் ஆலயத்திற்காக, "என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக," என்று ஜெபித்தான். கர்த்தர் அவன் ஜெபத்தில் மிகவும் பிரியப்பட்டு, "என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்," என்று பதில் கூறினார். நம் தேவன் எவ்வளவு அன்பானவர்! நம் தேவன், நாம் கேட்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மேலாகக் கொடுக்கக்கூடியவர்.

அவ்வண்ணமே, எசேக்கியா ராஜா ஜெபித்தபோது, கர்த்தர், "உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்" என்று கூறினார் (2 இராஜாக்கள் 20ம் அதிகாரம்). அன்னாளும் தேவாலயத்தில் ஜெபித்தாள். கர்த்தர், அவள் ஜெபத்திற்குச் செவிகொடுத்தார். அவள், தனக்காக ஒரு குழந்தையைக் கேட்கவில்லை. ஆனால், "கர்த்தாவே, நீர் எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தால், நான் அவனை உமக்கே ஒப்புக்கொடுக்கிறேன்," என்று கூறினாள். அந்த ஜெபம் தேவனுக்குப் பிரியமாயிருந்தது. எங்கள் தந்தை சகோ.டி.ஜி.எஸ். தினகரன் சுகவீனப்பட்டிருந்தபோது, நாங்கள் அனைவரும் குடும்பமாகக் கூடி ஜெபித்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் எங்கள் எல்லோரையும் தம் மீது கரங்களை வைத்து ஜெபிக்கும்படி கூறினார். என் முறை வந்தபோது, நான், "ஆண்டவரே, என் அப்பாவுக்கு நல்ல சுகத்தைத் தாரும். அவரை குணமாக்கும். அவர் ஜெபிக்கும்போது அநேகர் சுகம் பெறும்படி அவரை சுகப்படுத்தும்," என்று ஜெபித்தேன். நான் ஜெபித்தபோது, ஆண்டவர் என்னை பரிசுத்த ஆவியினால் நிறைத்தார்; நான் மகிழ்ச்சியில் சிரித்தேன். கர்த்தர், என் ஜெபத்தில் பிரியப்பட்டார் என்று அறிந்தேன். அன்று நிச்சயமாகவே தேவனிடமிருந்து புதிய கிருபையைப் பெற்றுக்கொண்டேன்.

அன்பானவர்களே, நம் தேவன் நம் ஜெபங்களுக்குச் செவிகொடுக்கிறார்; ஒரு ஜெபமும் வீணாய்ப் போகாது. தேவன் நம் கண்ணீரையெல்லாம் ஒரு துருத்தியில் வைத்திருக்கிறார் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 56:8). "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது," என்று வேதத்தில் வாசிக்கிறோம் (சங்கீதம் 34:15). இன்று நாம் ஆலயத்திற்குச் சென்று ஜெபிக்கவேண்டும் என்ற தேவையில்லை. ஏனென்றால், மெய்யான தேவ ஆலயமாகிய இயேசு, நம் இருதயங்களில் வசிக்கிறார். எந்த நேரமும், எந்த இடத்திலும் நாம் இயேசுவுடன் பேசலாம். சிலவேளைகளில் நம் ஜெபங்கள் கேட்கப்படவில்லையோ என்று நாம் நினைக்கலாம். ஆனால், தம்முடைய ஆசீர்வாதங்களின் பெறுமதியை உணர்ந்துகொள்ள வைப்பதற்காக ஆண்டவர் நம்மை காத்திருக்கப்பண்ணுகிறார். ஆண்டவர் செவிகொடுப்பதால், கேட்டுக்கொண்டே இருங்கள்; தட்டிக்கொண்டே இருங்கள். இன்றும், அவர், "உன் ஜெபத்தைக் கேட்டேன்," என்று கூறுகிறார். மனந்தளராதிருங்கள். சிறந்தவை இனிமேல்தான் வரும். தாவீது கூறியதுபோல், தேவன் உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் (சங்கீதம் 23:5).  எல்லாமும் உங்களுக்காக வைத்து வைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் காத்திருக்கும்போது, ஆண்டவர் உங்களுக்குத் தரும் ஆசீர்வாதங்களை பெறுமதியாக கருதுவீர்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, என் ஜெபங்களை நீர் கேட்பதாலும், என் கண்ணீரை காண்கிறதாலும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் காத்திருக்கும்வேளையிலும், என்னுடைய நன்மைக்காக நீர் கிரியை செய்துகொண்டிருக்கிறீர் என்று நம்புகிறேன். ஆண்டவரே, தயவாய் என் விசுவாசத்தை பெலப்படுத்தும்; மனம் சோர்ந்து போகாதிருக்க உதவும். உம் பிரசன்னம் என் வாழ்வில் நிறைந்திருப்பதாக. நீர் எனக்காக ஆயத்தம்பண்ணியிருக்கிற எல்லா ஆசீர்வாதத்தின் பெறுமதியையும் கண்டுகொள்ள எனக்குக் கற்பித்தருளும். கண்ணீர் நிறைந்த என் விண்ணப்பங்கள் அனைத்துக்கும் பதில் தருவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.