அருமையானவர்களே, இன்றைக்கு உங்களோடு தொடர்புகொள்வதில் மகிழ்ச்சி. தேவனுடைய வார்த்தையை நாம் கவனிக்கும்போதே அவருடைய சந்தோஷம் நம் உள்ளங்களுக்குள் வரும். இன்றைய வாக்குத்தத்த வசனம், "கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்" (1 சாமுவேல் 17:47) என்று கூறுகிறது. எவ்வளவு வல்லமையான வாக்கியம்! யுத்தம் கர்த்தருடையது என்ற வாக்கியமே முதலில் என் கண்ணில் பட்டது.
அன்பானவர்களே, உங்கள் வாழ்வில் யுத்தம் மற்றவர்களால் உண்டாகிறது என்று யோசிக்கக்கூடும். ஆம், அவர்கள் உங்களை எதிர்க்கலாம் அல்லது பிரச்னைகள் உங்களை எதிர்க்கலாம். ஆனால், அந்த யுத்தம் கர்த்தருடையது என்பதை நீங்கள் மறந்திடக் கூடாது. அது உங்களுக்கு விரோதமாக யாரோ ஒருவர் செய்யும் யுத்தமல்ல; அது உங்கள் வாழ்வில் அனுமதிக்கப்பட்ட கர்த்தரின் யுத்தமாகும்.
ஏன்? வசனத்தின் அடுத்தப் பகுதி, "அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்" என்று கூறுகிறது. இவை அனைத்தும் உங்கள் கரங்களில் வரும். யாராவது உங்களிடமிருந்து சொத்துகளை திருடியிருந்தால் அவை திரும்பவும் உங்கள் கரங்களுக்கு வந்து சேரும். அந்தச் சத்துருக்களும் வந்து உங்கள் பாதத்தில் விழுவார்கள். இந்த வசனம் அங்கே கூடியிருக்கிறவர்கள் எல்லோரும் கர்த்தர் இரட்சிக்கிறவர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கூறுகிறது. உங்களுக்காக இரட்சிக்கும் கர்த்தர், உங்களையும் இரட்சிப்பார். உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் செயல்படுவதை மக்கள் காண்பார்கள்; அவருக்குப் பயப்படுவார்கள். அவருக்குப் பயப்படுவதோடு, உங்களுக்கும் பயப்படுவார்கள்; "கர்த்தர் எங்களுக்குத் தீங்கு செய்திடவேண்டாம்," என்று கூறி உங்களிடம் சரணடைவார்கள். இது கர்த்தரின் யுத்தமாகும். அந்த மக்கள் கர்த்தரே உங்களுக்காக யுத்தம் செய்வதை காண்பார்கள். ஆகவே, பயப்படாதிருங்கள். இந்த யுத்தத்தில் தேவன் உங்களை இரட்சிப்பார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். வேதம், உங்கள் திராணிக்குமேல் சோதிக்கப்படுவதற்கு தேவன் அனுமதிக்கமாட்டார். சோதனையை தாங்கிக்கொள்ள பெலனை அளிப்பதோடு, அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வழியை உண்டாக்குவார் என்று கூறுகிறது.
ஓர் அரசு துறைக்கு எங்கள் ஸ்தாபனத்தில் ஏதோ தவறு இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் வந்து முழுவதும் ஆய்வு செய்யப்போவதாகவும் கேள்விப்பட்டோம். சாதாரணமாகக் கூறுவதானால், நாங்கள் பயந்துவிட்டோம். அந்தத் தகவல் என்ன? எது தவறாக இருக்கக்கூடும்? என்றெல்லாம் யோசித்தோம். பிரியமானவர்களே, அது கர்த்தரின் யுத்தம். அவர்கள் வந்தனர்; எல்லாவற்றையும் ஆய்வு செய்தனர்; தவறு எதையும் கண்டுபிடிக்கவில்லை. எங்கள் ஸ்தாபனத்தில் எல்லாமே சரியாக இருந்தது. ஆச்சரியப்பட்டோம்! பயப்பட ஒன்றுமில்லை. அது கர்த்தரின் யுத்தம் என்றும் அவர் எங்களைக் காப்பாற்றுவார் என்றும் நாங்கள் அறிந்திருக்கவேண்டும். அவர் எங்களுக்காக யுத்தம் செய்தார்; நாங்கள் உத்தமமான ஸ்தாபனம் என்றும், அரசின் பார்வையில் எல்லாவற்றையும் சரியாகவே செய்திருக்கிறோம் என்றும் அறியச் செய்தார். நீங்கள் எல்லாவற்றையும் சரியாய் செய்கிறவர் என்று உங்கள் எதிரிகளும் அறிந்திடும்படி அவர் செய்வார். அப்போது அவர்கள் உங்களைக் கனப்படுத்துவார்கள்.
ஆகவே, அன்பானவர்களே, பயப்படாதிருங்கள். யுத்தம் கர்த்தருடையது. அவரை நம்புங்கள்; அவர் உங்களுக்காக யுத்தம் செய்வார்; உங்கள் வாழ்வில் வெற்றியை அருளிச்செய்வார். ஆண்டவர்தாமே எல்லா யுத்தங்களிலிருந்தும் உங்களை விடுவித்து, உங்கள் வாழ்வில் தம் உண்மையை விளங்கப்பண்ணுவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எல்லா யுத்தங்களும் உம்முடையவை என்று நினைவுப்படுத்துகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். மக்கள் என்னை எதிர்க்கும்போது, பிரச்னைகள் எழும்பும்போது, இக்கட்டான சூழ்நிலைகளை நான் சந்திக்கும்போது, பயப்படாதிருக்க எனக்கு உதவும். எனக்காக யுத்தம் செய்து, ஸ்திரமாக நிற்க எனக்கு பெலன் தந்தருளும். நீர் என்னிடம் ஒப்படைத்த எல்லாவற்றையும் பாதுகாத்தருளும்; இழந்தவற்றையெல்லாம் திரும்ப தந்தருளும். உமக்கு முன்பாக நேர்மையாக நடந்திட ஞானம், உத்தமம், தைரியம் எல்லாவற்றையும் எனக்கு அருளிச்செய்யும். உம் பரிபூரண சித்தத்தின்படியே எல்லா சூழ்நிலையும் சரி செய்யப்படுவதாக. நீர் என்னோடு இருப்பதை அறிந்துகொள்ளும்படி செய்து, என் வாழ்க்கை உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வரும்படி நடத்தும். எனக்கு பூரண வெற்றியையும் விடுதலையையும் அளித்திடவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


