எனக்கு அருமையான தேவ பிள்ளையே, ஆண்டவர்தாமே உங்களுக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தம் பரிபூரண ஆசீர்வாதத்தையும் அருளிச் செய்வாராக. அன்பானவர்களே, இந்த உலகத்தில் நாம் பலவேளைகளில் உபத்திரவப்படுகிறோம். பல்வேறுவிதங்களில், அன்றாட வாழ்வில் பிரச்னைகளை கடந்து செல்லுகிறோம். ஆனால், வேதம், "கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்" (யோசுவா 21:44) என்று கூறுகிறது. இந்த வாக்குத்தத்தத்தை ஆண்டவர் இன்றைக்கு உங்களுக்குத் தருகிறார். நீங்கள் இளைப்பாறுதலை, மகிழ்ச்சியை, சந்தோஷத்தை, ஆறுதலை, தேறுதலை விரும்பலாம். ஆண்டவர், "நான் உனக்கு அவற்றைத் தருகிறேன். என்னண்டைக்கு வா," என்று அழைக்கிறார். வேதம், "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்," (மத்தேயு 11:28) என்று கூறுகிறது. அன்பானவர்களே, பல கவலைகளால் பாரப்பட்டிருக்கிறீர்களா? மக்கள் உங்களை உபத்திரவப்படுத்துகிறார்களா? எல்லா இடங்களில் கடன் வாங்கியிருப்பதால் உபத்திரவம் வருகிறதா? தேவன், "என்னிடம் வா, நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்," என்று அழைக்கிறார்.

அன்பானவர்களே, உங்களைப் பற்றி என்ன? ஆண்டவருடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறதா? "இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்," (ஆபகூக் 3:16) என்று வேதம் கூறுகிறது. ஆண்டவர் எப்படி உங்களுக்கு இளைப்பாறுதல் அல்லது தேறுதலை அளிப்பார்? வேதம், தேவனுடைய வார்த்தையின் வாயிலாக இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கூறுகிறது. எவ்வளவு அதிகமாக தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறீர்களோ அந்த அளவு அதிக ஆறுதலை அடைவீர்கள். "தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது" (ரோமர் 15:4) என்றும், "உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது," (சங்கீதம் 119:50) என்றும், "உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது," (சங்கீதம் 94:19) வேதத்தில் வாசிக்கிறோம். நீங்கள் தேவனுடைய வார்த்தையை அதிகமாக வாசிக்க, வாசிக்க அதனால் நீங்கள் தேறுதல் அடைவீர்கள்.

தேவனுடைய வார்த்தையில் ஜீவன் உள்ளது. மெய்யாகவே, அதில் ஜீவன் இருக்கிறது. அது ஏற்றநேரத்தில் உங்களோடு பேசும். தேவ சமுகத்தில் நீங்கள் காத்திருந்தால், ஆண்டவர் வந்து உங்களுக்கு இளைப்பாறுதலை அளிப்பார். வேறு வழியே இல்லை. உங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுங்கள். உங்களால் முடிந்த அளவு தேவனுடைய வார்த்தையை வாசியுங்கள். வார்த்தை உங்களை ஆறுதல்படுத்தும். ஆண்டவர் உங்களுடன் பேசுவார். தேவ சமுகத்தில் காத்திருங்கள்; ஆண்டவரே உங்கள் கூப்பிடுதலைக் கேட்டு, உங்களுக்கு ஆறுதல் தருவார்; எல்லா பிரச்னைகளிலுமிருந்தும் உங்களை விடுவிப்பார். ஆண்டவரை நோக்கிப் பார்க்கும் வழக்கம் உங்களுக்கு உள்ளதா? வாருங்கள், நாம் ஆண்டவரைப் பற்றிக்கொள்வோம். அவரை நோக்கிக் கூப்பிடுவோம். அவர் உங்களுக்குச் சமாதானத்தை, ஆறுதலை, தேறுதலை அளிப்பார்; நீங்கள் செல்வதற்கான பாதையையும் கொடுப்பார்.

ஜெபம்:
ஆண்டவரே, என்னுடைய பாரங்கள், கவலைகள் இவற்றோடு உம்மிடம் வருகிறேன். எப்பக்கத்திலும் என்னை சூழ்ந்திருக்கும் உபத்திரவங்களை நீர் காண்கிறீர். உம் வாக்குத்தத்தத்தின்படியே எப்பக்கமும் எனக்கு இளைப்பாறுதலை அளித்திடும். என் முழு இருதயத்தோடும் உம்மை தேட எனக்குக் கற்றுத்தாரும். தினமும் உம் வார்த்தையை வாசித்து, அதைப் பற்றிக்கொள்ள எனக்கு உதவும். உம் வார்த்தை என் ஆத்துமாவை தேற்றுவதாக; ஜீவனை அளிப்பதாக. ஆண்டவரே, ஏற்ற நேரத்தில் என்னுடன் பேசும். என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டு, எல்லா பிரச்னைகளிலிருந்தும் என்னை விடுவித்தருளும். நான் செல்லவேண்டிய பாதையில் என்னை வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.