இன்றைக்கு, "வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்" (நீதிமொழிகள் 21:20) என்ற வசனத்தைத் தியானிப்போம். இந்த வசனத்தை வாசிக்கும்போது, 'நாளையைக் குறித்துக் கவலைப்படாதே", "இன்றே வாழ்ந்துவிடு", "இன்றைய தினத்தைக் கொண்டாடு", "நாளை என்பது உறுதியல்ல" போன்ற பல வாசகங்கள் நினைவுக்கு வருகின்றன. அநேகர் நிகழ்காலத்திற்காக மட்டுமே வாழ்கிறபடியால் இதுபோன்ற சிந்தனைகள் தோன்றுகின்றன. அவர்கள், "இன்றைக்கு நான் சந்தோஷமாக இருக்கட்டும். இன்றைய பொழுதை ஓட்டிவிட்டால் போதும். நாளையைக் குறித்து நான் யோசிக்க வேண்டியதே இல்லை," என்றெல்லாம் கூறுகிறார்கள். எதிர்காலத்தைக் குறித்து யோசிக்காததால், இக்கட்டான நேரத்திற்கு ஆயத்தமாகாதவர்களாக இருக்கிறார்கள். தேவையான காலத்திற்கு பொருட்களை சேர்த்து வைக்கவும், சேமிக்கவும் தவறிவிடுகிறார்கள். பெருந்தொற்றுக் காலத்தில் நாம் இதைக் கண்டோம். அநேகர் திடீரென தங்கள் வேலைகளை இழந்தார்கள்; தங்களிடம் சேமிப்பே இல்லாதிருந்தார்கள். சாப்பிடுவதற்குக் கூட குடும்பங்கள் தடுமாறின. அதுபோன்ற எதிர்பாராத சிக்கலுக்கு ஆயத்தமாகாதிருந்ததினால் வெகுவாய் பாடுபட்டார்கள்.

வேதாகமம், தெய்வீக ஞானத்திற்கு யோசேப்பின் வாழ்க்கையை உதாரணமாகக் காட்டுகிறது. தேவன், யோசேப்புக்கு ஏழு ஆண்டுகள் பரிபூரண விளைச்சல் இருக்கும்; அதை அடுத்து வரும் ஏழு ஆண்டுகள் கடும் பஞ்சமும் காணப்படும் என்று வெளிப்படுத்தினார். திரளாய் விளையும் ஆண்டுகளில் தானியங்களை சேமித்து வைக்க தேவன் அவனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். யோசேப்பு எல்லா பட்டணங்களிலும் எல்லா வயல்களிலுமிருந்து அளவிடப்படவோ, எண்ணப்படவோ கூடாத அளவு மிகுதியான தானியங்களைச் சேர்த்தான். பஞ்சம் ஆரம்பித்தபோது, மக்கள் தானியங்களை வாங்கும்படி எகிப்துக்கு வந்தனர். முதலாவது அவர்கள் பணம் கொடுத்து தானியம் வாங்கினர். பின்னர், தங்கள் ஆடு, மாடுகளைக் கொடுத்தனர். பிறகு தங்கள் நிலத்தை விற்றனர். இப்படியாக, அவர்கள் உயிர் பிழைப்பதற்காக பார்வோனின் ஊழியக்காரரானார்கள். யோசேப்பு தேவ ஞானத்துக்குக் கீழ்ப்படிந்து முன்னரே ஆயத்தமாகிவிட்டபடியால், பார்வோன் அவனை மிகவும் கனப்படுத்தி, பெரும் அதிகாரத்தை அளித்தான்.

அவ்வாறே, உங்கள் மற்றும் குடும்பத்தினரின் எதிர்காலத்திற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் நீதிமொழிகளில் வாசிக்கிறபடி, தேவன் நமக்குக் கொடுத்த பொறுப்புகளை நன்றாக செய்கிறவர்களாக இருக்கும்படி ஞானம் போதிக்கிறது. "நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாதிருங்கள்," என்றும் வேதம் கூறுகிறதே என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆம், அப்படித்தான்! தேவன் ஒருபோதும் நாம் எதிர்காலத்தைக் குறித்த கலக்கத்துடன், பயத்துடன் இருப்பதை விரும்பவில்லை. ஆனாலும், தேவனை நம்புவது என்பதற்கு கவனமின்றி வாழ்வது என்பது அர்த்தமல்ல. மாறாக, அவர் மீது முழு திடநம்பிக்கை வைக்கும்போதே, ஆயத்தமாகவேண்டும் என்பதற்காக ஞானத்தை நமக்குத் தருகிறார்.

ஒருவேளை இன்று நீங்கள் அன்றாட தேவைகளுக்குப் போதுமான அளவில் வருமானம் இல்லையென்று நினைக்கலாம். "எனக்கு எதுவும் அதிகமாய் இல்லை. தேவைகளுக்கு மட்டுமே சம்பாதிக்க முடிகிறது," என்று எண்ணலாம். தேவனுடைய வாக்குத்தத்தத்தை மறந்துபோகாதிருங்கள். தேவன் உங்கள் தேவைகளையெல்லாம் சந்திப்பார் என்று வேதம் கூறுகிறது (பிலிப்பியர் 4ம் அதிகாரம்). தம் ஐசுவரியத்தின்படியே அவரால் உங்களைச் செழிக்கப்பண்ண முடியும். ஆகவே, ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திடுங்கள். அவர் உங்கள் தேவைகளை சந்திப்பார்; உங்களிடம் இருப்பவற்றை நிர்வகிக்க ஞானத்தைத் தருவார்; உங்கள் கையின் பிரயாசத்தை வாய்க்கப்பண்ணுவார். யோசேப்பு கணக்கற்ற மக்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கியதுபோல, மற்றவர்களின் தேவையின் வேளையில் அவர்களுக்கு உதவும்படி தேவனால் உங்களை ஆசீர்வதிக்க முடியும். மிகுதியான அளவில், எண்ண முடியாதபடி நிரம்பி வழியும்வண்ணம் தேவனால் உங்களை ஆசீர்வதிக்க முடியும். ஆகவே, திடன்கொள்ளுங்கள்; அவர்மேல் திடநம்பிக்கை வைத்திடுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உண்மையாய் எனக்கு வேண்டியவற்றை அளிப்பவராகவும், எல்லா நன்மையான ஈவுகளையும் தருகிறவராகவும் விளங்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எனக்கு அளித்திருக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும் சரியாக பயன்படுத்த என்னை உம் பரம ஞானத்தினால் நிரப்பிடும். எதிர்காலத்தைக் குறித்து இருக்கும் எல்லா பயத்தையும் கலக்கத்தையும் அகற்றும்; தேவைகளை அருளிச்செய்யும் உம் இயல்பை முற்றிலுமாக நம்புவதற்கு எனக்குக் கற்பித்தருளும். பரிபூரணத்தின் காலத்தில் ஆயத்தமாவதற்கு யோசேப்புக்கு நீர் ஞானத்தை அளித்ததுபோல், என் குடும்பத்தையும், எதிர்காலத்தையும் குறித்து சரியான முடிவுகளை எடுக்கும்படி என்னை ஞானத்தினால் நிறைத்திடும். என் தேவைகள் எல்லாவற்றையும் சந்தித்திடும்; என் கையின் பிரயாசங்களை வாய்க்கப்பண்ணும்; உம் பரிபூரண சித்தத்தின்படி என் பொருளாதாரத்தை ஆசீர்வதித்தருளும். தேவையில் இருப்போருக்கு உதவி செய்து உம் பரிசுத்த நாமத்திற்கு மகிமையை கொண்டு வர கிருபை அருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.