அன்பானவர்களே, ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் நாட்களையும் ஆண்டையும் கூட்டுவது, கவலையை பெருக்குவதற்காக அல்ல; தம் நன்மையை உங்களை அனுபவிக்கப் பண்ணி, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக திகழும்படி வைப்பதற்காகவே அப்படிச் செய்கிறார். இம்மாதத்திற்கான வாக்குத்தத்த வசனம், "நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்" (ரோமர் 15:2) என்று கூறுகிறது.

எவ்வளவு அருமையான அழைப்பு! தேவன், நம்மை குடும்பத்தில், அண்டை அயலகத்தில், அலுவலகத்தில், பள்ளியில், சமுதாயத்தில் வாழ்வதற்காக மட்டும் வைத்திருக்கவில்லை; நம்மைச் சுற்றிலுமிருக்கிறவர்கள் வாழ்க்கையை கட்டுவதற்காகவும் வைத்திருக்கிறார். இயேசு, "நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்" (யோவான் 13:34) என்று கூறியுள்ளார்.

இதைப் புரிந்துகொள்வதற்கு, இயேசு தம் சீஷர்களை நடத்திய விதத்தைப் பார்க்கவேண்டும். அவர்கள் தவறு செய்தார்கள்; அவரை தவறாகப் புரிந்துகொண்டார்கள். சிலநேரங்களில் பயந்தும் சுயநலத்தோடும் செயல்பட்டார்கள். ஆனாலும் இயேசு அவர்களை விட்டுவிடவில்லை. இயேசு இப்படி தன் சீஷர்களை நேசித்தார். தேவைப்படும்போது திருத்தினார்; போராடியபோது அவர்கள்பேரில் அக்கறையாயிருந்தார்; அவர்களுக்குத் தேவைப்படுகிறவற்றை அளித்தார்; வளர்வதற்கு உதவினார்.

இப்படியே நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் அன்புகூர அழைக்கப்பட்டிருக்கிறோம். நீங்கள் யாரையாவது திருத்தவோ, வழிநடத்தவோ அல்லது ஆலோசனை கூறவோ நினைக்கும்போது, "அவர்கள் இடத்தில் நான் இருந்தால் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று விரும்புவேன்?" என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். நாம், கிறிஸ்துவிடமிருந்து பெற்ற அதே அன்போடு மக்களை நடத்தும்போது, அவரது அன்பு நம் வாழ்வில் காணப்படும்; மக்கள் ஸ்திரப்படுத்தப்படுவார்கள்.

சிலவேளைகளில் இந்த அன்பு, நம்மை புண்படுத்தியவர்களையும், நமக்கு தீங்கு செய்தவர்களையும் மன்னிக்கவும், அவர்களுக்கு நன்மையை நாடவும் அழைக்கிறது.

ஒருமுறை பிரார்த்தனை கூட்டமொன்றில், செய்தியாளர், அனைவரும் பரிசுத்த ஆவியின் நிறைவை பெறும்படி ஜெபிக்கக் கேட்டுக்கொண்டார். எல்லோரும், "ஆண்டவரே, நான் உம் ஆவியால் நிரப்பப்பட விரும்புகிறேன். நான் இயேசுவைப்போல் மாறி, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்க விரும்புகிறேன்," என்று ஜெபிக்க ஆரம்பித்தனர். அநேகர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை உணர்ந்தனர்; ஆனால், சிலரோ தாங்கள் தேடியதைப் பெற்றுக்கொள்ளவில்லை.

அப்போது, செய்தியாளர் ஜெபத்தை நிறுத்திவிட்டு, "யார் பேரிலாவது உங்களுக்குக் குறை இருக்குமானால், முதலில் அந்த நபரை மன்னியுங்கள். அவர்கள் உங்களுக்கு என்ன தவறு செய்திருந்தாலும் அவர்களை நேசியுங்கள். உங்கள் கசப்பை ஒதுக்கி வைத்துவிடுங்கள். உங்கள் உள்ளம் அன்பால் நிரம்பட்டும்," என்று கூறினார்.

ஒருவர், "என் அக்கா என் இடம், சொத்துகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டாள். எனக்கு எதுவுமே இல்லாமல் போனது. நான் என் அக்காவின் வீட்டுக்குச் சென்று, இவை எல்லாம் நடந்தது. ஆனால், என் இருதயத்தில் கசப்பை வைத்துக்கொள்ள விரும்பவில்லை. கசப்பையெல்லாம் மறந்து ஆண்டவரின் சமுகத்திற்குள் வந்ததும், அவர் தம் ஆவியை என்மேல் ஊற்றினார். எனக்கு மிகுந்த ஆசீர்வாதம் கிடைத்துள்ளது," என்று கூறினார்.

பிரியமானவர்களே, இது ஒப்புரவாகுதலின் ஆவி. நிபந்தனையற்ற அன்பு. வேதம், "ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (கொலோசெயர் 3:13) என்று கூறுகிறது.

வேதம், "ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்" (கலாத்தியர் 6:2) என்று கூறுகிறது.

தத்தளிக்கிறவர்களுக்கு உதவும்படி ஆண்டவர் நம்மை அழைக்கிறார். நாம் அதைக் கேளாதவர்கள்போல இருந்துவிடக்கூடாது. மனதுருக்கத்தோடு பதில் கூறி, நம்மால் இயன்ற உதவியை செய்யவேண்டும். மற்றவர்களின் பாரங்களை நீங்கள் சுமப்பதால், ஆண்டவர் உங்கள் பாரங்களைச் சுமப்பார். அவர் உங்களைக் கண்ணோக்குவார்; உங்களை தாங்குவார்; உயர்த்துவார்.

மற்றவர்களுக்காக செய்கிறவற்றால் மட்டும் அல்ல; நாம் பேசும் வார்த்தைகளாலும் அவர்களை கட்டியெழுப்புகிறோம்.

வேதம், "நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்" (1 தெசலோனிக்கேயர் 5:11) என்று கூறுகிறது.

என் பிள்ளைகள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஆண்டவர் அவர்களுக்கென்று பிரத்யேகமான வசனத்தை சிலவேளைகளில் தந்திருக்கிறார்.

அவர்கள் கல்லூரிக்குப் புறப்படும்போது, அவர் என் இருதயத்தில் ஒரு வசனத்தைப் போடுவார். நான் அவர்களை அழைத்து, "இந்த வசனத்தை இன்றைக்கு ஆண்டவர் உனக்குக் கொடுக்கிறார்," என்று சொல்வேன்.

சிலவேளைகளில் அவர்கள் கண்களில் நீர் நிறைய, "இதுதான் எனக்கு தேவையாயிருந்தது," என்று சொல்வார்கள். அந்த ஒரு வசனம் அவர்களை ஊக்குவிக்கும்; அவர்கள் விசுவாசத்தைப் பெலப்படுத்தும்; ஆண்டவரிடமாய் அவர்களை இழுக்கும். இப்போதும் அவர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் ஆண்டவரின் தீர்க்கதரிசன கிருபையின் வழிநடத்துதல் கிடைக்கிறது.

ஆண்டவர், என் தந்தை டி.ஜி.எஸ். தினகரனுக்கு மனதுருக்கம் நிறைந்த இருதயத்தை கொடுத்திருந்தார். 1994ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி, சென்னையில் ஓர் உபவாச ஜெபத்தின்போது, நான் ஜெபித்தபோது, ஆண்டவர் இந்த வாக்குத்தத்தத்தை எனக்கு நினைவுப்படுத்தினார். அவர், "நீ மக்களுக்காக அழும்போது, நான் வந்து உன் கண்ணீரைக் காண்பேன். மனதுருக்கத்துடன் மக்களுக்காக நீர் கண்ணீர் வடிக்கும்போது, நான் அவர்கள் கண்ணீரைத் துடைப்பேன்," என்றார்.

ஆண்டவர் இப்போதும் இந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

இதேபோன்ற இருதயத்தை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தேவன் நமக்கு மனதுருக்கத்தை அருளும்போது, மற்றவர்களின் தேவையை கவனித்துக்கொண்டு மாத்திரம் இருக்கமாட்டோம்; அதற்கு ஏதோ ஒன்றை செய்திட விரும்புவோம்.

தேவன் உங்கள் வாழ்க்கையில் அழைத்து வரும் ஒவ்வொருவருக்கும் அவரது அன்பைக் காட்டுங்கள். பிறரின் பாரங்களைச் சுமப்பதுடன், நம்பிக்கையான வார்த்தைகளைப் பேசவும், செல்லுமிடமெங்கும் ஆசீர்வாதமாக இருக்கவும் தேவையான கிருபையை தேவன்தாமே உங்களுக்கு அருளுவாராக. தேவையோடு இருப்போருக்காக வாரத்தில் இரண்டே மணி நேரம் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் இணைந்து ஜெபிக்கும்படி உங்களை அழைக்கிறேன்.

உங்கள் வீட்டிலிருந்தே கணினி அல்லது மடிக்கணினி வாயிலாக நீங்கள் ஜெபிக்கலாம். ஜெப கோபுரத்துடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள்; வரும் ஜெப விண்ணப்பங்களுக்காக ஜெபிக்கலாம். தேவையான பயிற்சியை நாங்கள் வழங்கி ஊழியம் செய்வதற்கு வழிகாட்டுவோம்.  63807 52266 அல்லது 97890 63611 என்ற தொலைபேசி எண்களில் பகல் 11 முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

டெல்லியிலுள்ள தேசிய ஜெப கோபுரத்திற்கு நீங்கள் வருகை தந்து, நம் தேசத்திற்காகவும், தேசத்திற்கான ஆண்டவருடைய வழிநடத்துதலை நாடியும் ஜெபிக்கலாம். இந்த ஜெப ஊழியத்தில் பங்குபெறும்படி வழிநடத்தப்படுவீர்களானால் 88263 40077, 88263 40033 என்ற தொலைபேசி எண்களில் அல்லது  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த அழைப்பில் நீங்கள் நடக்கும்போது, ஆண்டவர் உங்கள் வீட்டைக் கட்டுவார்; உங்கள் குடும்பத்தை நிலைப்படுத்துவார். கர்த்தரின் சமுகம் உங்கள் வீட்டாரின்மேல் தங்கும்; உங்கள் பிள்ளைகள் தீர்க்கதரிசிகளாக எழும்புவார்கள்; சுற்றிலும் வசிப்போருக்கும் தேசத்துக்கும் உங்கள் குடும்பம் வெளிச்சமாக பிரகாசிக்கும்.

ஜெபம்:
பரம தகப்பனே, பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி என்னை அழைக்கிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் உள்ளத்தை உம் அன்பாலும் மனதுருக்கத்தாலும் நிறைத்து, இயேசுவைப்போல் நேசிப்பதற்கு எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். என்னை புண்படுத்தியவர்களை மன்னிப்பதற்கும், ஒவ்வோர் உறவிலும் சமாதானத்தை தேடவும் உதவும். மற்றவர்களின் வேதனையை அறிந்துகொள்ளும், அவர்களது பாரங்களை பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மையை எனக்குத் தந்தருளும். விடாய்த்திருக்கிறவர்களை பெலப்படுத்தும்படியாக ஞானத்தின், ஆறுதலின், தைரியத்தின் வார்த்தைகளை என் வாயில் போடும். பரிசுத்த ஆவியானவரே, அனைவருக்கும் கருணையோடும், பொறுமையோடும், புரிந்துகொள்ளுதலுடனும் பதில் கூறும்படி என்னை வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் அருமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.