அன்பானவர்களே, "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்" (சங்கீதம் 23:6). இன்னொரு மொழிபெயர்ப்பில், தேவனுடைய இரக்கம், மக்களின் இரக்கம், உங்கள் குடும்பத்தினரின் இரக்கம், உங்கள் பகைவரின் இரக்கமும் நன்மையும்கூட உங்களைத் தொடரும் என்று எழுதப்பட்டுள்ளது. பயப்படாதிருங்கள். நன்மை வரும். கர்த்தர் நல்லவர். அவர் கிருபை என்றென்றைக்கும் இருக்கிறது என்றும், நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. எந்த இருளும் உங்களை அணுகுவதற்கு அவர் அனுமதிக்கமாட்டார் என்றும் வேதம் கூறுகிறது (சங்கீதம் 100:5; யாக்கோபு 1:17).

உங்கள் வாழ்வில் எல்லாமும் வெளிச்சத்தில் நடக்கும். இயேசு, "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" என்று கூறுகிறார் (மத்தேயு 7:11). நிச்சயமாகவே தேவன் உங்களுக்கு நன்மையான ஈவுகளைத் தருவார். உங்களுக்கு நன்மை செய்வதில் இருந்து அவர் ஓயமாட்டார் என்று வேதம் கூறுகிறது (எரேமியா 32:40). இந்த ஆண்டு முழுவதும் நம்மோடு இருந்ததற்காக தேவனை ஸ்தோத்திரிப்போம்.

அவரது நன்மையும் கிருபையும் நம்மை தொடர்ந்து வந்தன. "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை" என்று வேதத்தில் வாசிக்கிறோம் (புலம்பல் 3:22). பாவத்தாலோ, வியாதியாலோ, பொல்லாத மக்களாலோ, பிசாசாலோ நம்மை விழுங்க முடியவில்லை. தேவனுடைய அன்பினாலும் தேவனுடைய கிருபையினாலும் நாம் முற்றுங்ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். காலைதோறும் அவருடைய கிருபை புதிதாயிருக்கிறது. இந்தப் புத்தாண்டிலும் அது வரும். நாம் ஆண்டவரை துதிப்போம்.

ஜெபம்:
பரம தகப்பனே, உம்முடைய நன்மையும் கிருபையும் தினமும் என்னை தொடர்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நீர் என்மேல் கண்ணோக்கமாயிருப்பதினால் நான் பட்சிக்கப்படாதிருக்கிறேன். பாவம், வியாதி, பொல்லாப்புக்கு என்னை விலக்கிக் காப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம் வெளிச்சம் எல்லா இருளையும் என் வாழ்விலிருந்து அகற்றுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். புத்தாண்டினுள் அடியெடுத்து வைக்கிற இந்த வேளையில், எனக்கு நன்மை செய்வதை நீர் ஒருபோதும் நிறுத்துவதில்லை என்று முழு மனதோடு நம்புகிறேன். பரலோகத்தின் பூரண பலனாலும் ஈவுகளாலும் என் வாழ்க்கையை நிரப்பும். ஆண்டவரே, நான் உம்மை துதிக்கிறேன், எப்போதும் உம்மில் நம்பிக்கை வைத்திருக்கிறேன், இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.